Published : 28 Jul 2018 05:23 PM
Last Updated : 28 Jul 2018 05:23 PM
இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும் 5 டெஸ்ட்கள் கொண்ட தொடர் மிகவும் சுவாரசியமான தொடர் என்று கூறும் டேல் ஸ்டெய்ன், இங்கிலாந்துக்குச் சாதகமாக இருந்தாலும் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா தொடருக்குப் பிறகே குறைத்து மதிப்பிடமுடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த கோடைக்காலம் மிகவும் வறண்டிருக்கும் என்பதால் இரு அணிகளும் அதிக ரன்கள் குவிக்கும் தொடராகவே இது அமையும் என்று கணித்துள்ளார் டேல் ஸ்டெய்ன். இவரே 5 டெஸ்ட் போட்டிகளில் 23 விக்கெட்டுகளை இங்கிலாந்தில் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் பற்றி கூறியதாவது:
தென் ஆப்பிரிக்கா தொடரில் இந்திய அணி சிறப்படைந்தது. அதனால்தான் ஜொஹான்னஸ்பர்கில் கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றனர். ஒருநாள் போட்டிகளில் உண்மையில் இந்திய அணியை வீழ்த்த முடியாது என்ற நிலையே இருந்தது.
இந்திய அணி நன்றாக உள்ளது. இந்தத் தொடர் சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நான் வெற்றி தோல்விகள் பற்றி கணிப்புகளை வெளியிடத் தயாராக இல்லை. ஆனால் இங்கிலாந்து பக்கம் சாதக அம்சங்கள் உள்ளன. இந்தியாவும் இப்போதெல்லாம் அயல்நாடுகளில் சவாலாகத் திகழ்கின்றனர். ஆனால் நான் பெட்கட்டினால் இங்கிலாந்து பக்கம்தான் கட்டுவேன். ஆனால் இது அவ்வளவு எளிதல்ல.
இந்தியாவைப் பொறுத்தவரை அழகான விஷயம் என்னவெனில் நிறைய திறமைகள் உள்ளனர், காயமடைந்தால் உடனே மாற்று வீரர்கள் அதே திறமையில் உள்ளனர். இப்போது தினேஷ் கார்த்திக் அணிக்குள் வந்துள்ளார்.
இந்த கோடைக்காலம் இங்கிலாந்து வறண்டு கிடக்கிறது, நிறைய ரன்கள் குவிக்கப்படும். எந்த நாட்டில் நடக்கிறதோ அந்த நாட்டுக்குச் சாதகமாகவே முடிவுகள் இருக்கும். பந்துகள் ஸ்விங் ஆனால் ஆண்டர்சன், பிராட் பெரிய பங்காற்றுவார்கள், பந்துகள் ஸ்விங் ஆகவில்லையெனில் அவ்வளவுதான் விராட் கோலி, தவண், ராகுல் போன்றவர்களை எப்படி இங்கிலாந்து வீழ்த்துவார்கள்?
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஆடுவதற்குக் கடினமான இடம், அங்கு வந்து இந்திய அணி சிறப்படைந்தார்கள், அதேதான் இங்கிலாந்திலும் நடக்கலாம். இது அதிக ரன்குவிப்பு தொடராக இருக்கும், ஆனாலும் இந்திய பவுலர்களை விட இங்கிலாந்து பவுலர்கள் கொஞ்சம் சிறப்பானவர்கள். இதுதான் வித்தியாசம்.
விராட் கோலி தலைமையில் இந்த இந்திய அணி என்ன வேண்டுமானாலும் சாதிக்கும். நான் விராட் கோலியை அதிகம் அறிவேன், அவர் உறுதியான ஒரு குணம் கொண்டவர். நிச்சயம் கடினமான போராட்ட 5 டெஸ்ட் தொடராகவே இது இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT