Published : 27 Jul 2018 05:25 PM
Last Updated : 27 Jul 2018 05:25 PM
இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட சவாலான தொடரை இந்திய அணி எதிர்நோக்குகையில் முக்கிய வீரர், அதுவும் முக்கியமான 3ம் நிலையில் களமிறங்கும் புஜாரா திருப்திகரமான பார்மில் இல்லாதது இந்திய அணிக்கு கவலைகளை ஏற்படுத்தியிருக்கலாம்.
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் அவர் 12 முறை ஆட்டமிழந்ததில் 8 முறை பவுல்டு அல்லது எல்.பி.ஆகியிருக்கிறார். மேலும் தென் ஆப்பிரிக்காவில் கடினமான பிட்சில் 54 பந்துகளைச் சந்தித்து தன் முதல் ரன்னை எடுத்ததும் நாம் அறிந்ததே. டெஸ்ட் கிரிக்கெட் என்பது மட்டுமல்ல எந்த ஒரு கிரிக்கெட்டகா இருந்தாலும் பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுக்க வேண்டும், பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும், இதுதான் உடனடித்தேவை, இதற்காக என்ன உத்தியோ அதைக் கடைபிடிக்க வேண்டும் அவ்வளவே. 54 பந்துகள் சந்தித்து முதல் ரன்னை எடுப்பது சர்வதேச மட்டத்தில் அனுபவசாலியான புஜாராவுக்கு அழகல்ல, இது கிரிக்கெட்டும் அல்ல என்றுதான் பல நிபுணர்களும் கருதுகின்றார்.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் புஜாராவின் உத்திரீதியான தவறுகளைச் சுட்டிக் காட்டி விளக்கியுள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் அவர் இதனை வீடியோ ஒன்றில் செய்து காட்டி விளக்கிய போது கூறியதாவது:
நான் பார்த்ததிலேயே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு இரையாகும் உத்திகள் இல்லாதவர் ஆவார். நிறைய வீரர்கள் அப்படிப்பட்ட பந்துகளை விட்டு விடுவதா ஆடுவதா என்று குழம்புவதைப் பார்த்திருக்கிறேன்.
புஜாரா சிந்தித்து ஆடும் ஒரு வீரர், அவரது பலவீனமாக நான் நினைப்பது என்னவெனில் 1. பந்தை நெருக்கமாக கவனித்து ஆடுவதில்லை என்பதே. பவுலர் வருகிறார், இவர் என்ன நினைக்கிறார் என்றால் மட்டை சரியாக வருகிறதா பந்து வரும்போது மட்டையை சரியாக இறக்குகிறோமா என்பதில் கவனம் செலுத்துகிறார். இது அதி சிந்தனையினால் வருவது, அவர் கொஞ்சம் தன் உள்ளுணர்வை ஆட விட வேண்டும், இயல்பூக்கத்தை ஆட விட வேண்டும் என்று நினைக்கிறேன்.
இதனால் அவர் பந்தை நெருக்கமாகப் பார்க்காது தன் உத்தி மேலேயே அதிக கவனம் செலுத்துவதால் சில சமயங்களில் நன்றாக செட்டில் ஆன பிறகும் கூட இந்தியப் பிட்ச்களிலும் இவர் தடுப்பு வைக்கும் திசைக்கும் பந்தின் திசைக்கும் மாறுபாடு ஏற்பட்டு மட்டையைக் கடந்து எல்.பி.யோ, பவுல்டோ ஆகிறார். குறிப்பாக பார்மில் இல்லாத போது தன் மேலேயே அதிக கவனம் இருக்கும் பந்தைச் சரியாகப் பார்க்க மாட்டார்கள்.
புஜாராவின் 2வது பலவீனம் அவர் பந்தை சற்றே தாமதமாகச் சந்திப்பதாகும். இதனால் அவர் பவுல்டு ஆவது நடக்கிறது. எட்ஜிற்குப் பயந்து அவர் வலது கையை மிகவும் தளர்வாக வைத்துக் கொண்டு பந்தை இன்னும் கொஞ்சம் முன்னால் சந்திக்காமல் இன்னும் கொஞ்சம் உள்ளே விட்டு சந்திப்பதால் சில வேளைகளில் பந்து உள்ளே நுழைந்து விடுகிறது. சில வேளைகளில் பந்தை முன்னால் வந்து சந்திக்காததால் மட்டையை விரைவில் பந்துக்கு இறக்க முடியாமல் பந்து உள்ளே நுழைந்து விடுகிறது.
ஆகவே புஜாரா முதலில் தன் உத்தி பற்றிய கவலையை விடுத்து பந்தை நெருக்கமாக உற்று கவனிக்க வேண்டும். 2வது பந்தை தாமதமாக ஆடும் போது கவனமாக உறுதியுடன் ஆட வேண்டும்.
இவ்வாறு மஞ்சுரேக்கர் அந்த வீடியோவில் செய்து காட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT