Published : 15 Jan 2025 12:29 PM
Last Updated : 15 Jan 2025 12:29 PM
கிரிக்கெட் பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்வதால் விளையாட்டில் கவனம் சிதறுகிறது என்பதால் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல விதிமுறைகளில் சிலபல கெடுபிடிகளைப் புகுத்த உள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).
அதாவது 45 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் கொண்ட தொடர்களின் போது வீரர்களுடன் அவரது மனைவி, குழந்தைகள் ஆகியோர் மொத்தமே 14 நாட்கள் தங்கி இருக்கலாம். ஆனால், இந்த 14 நாட்கள் தொடரின் முதல் 2 வாரங்கள் அல்ல. முதல் இரண்டு வாரங்களுக்கு வீரர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. சிறிய தொடர்களின் போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் அதிகபட்சம் ஒரு வாரம் தங்கியிருக்கலாம்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்க்கருடன் மும்பையில் கடந்த சனிக்கிழமையன்று பிசிசிஐ நிர்வாகிகளைச் சந்தித்தனர். மேலும், அனைத்து வீரர்களும் அணியினர் செல்லும் பேருந்தில் தான் செல்ல வேண்டும். ஏனெனில், நேரம் கடைப்பிடிக்க வேண்டிய வலைப்பயிற்சியை சில வீரர்கள் துறந்து வருவதுதான் காரணம்.
சிறிது காலமாகவே அணியில் வீரர்களுடன் மனைவி மற்றும் குழந்தைகளை அனுமதிப்பது பற்றி மாறுபட்டக் கருத்துக்கள் நிலவி வருகின்றன. உறவினர்களிடமிருந்து வீரர்களைப் பிரித்து வைப்பதுதான் சக்சஸுக்கு வழி வகுக்கும் என்பதாக சொல்லி பிரேசில் கால்பந்து அணி ‘2019 கோப்பா அமெரிக்கா’ தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அவ்வாறு வீரர்களின் குடும்பத்தினரின் அணுக்கத்திற்கு (அக்சஸ்) செக் வைத்ததால் தான் பட்டம் வெல்லும் வாய்ப்பு கைகூடியது என்ற பேச்சும் தற்போது பிசிசிஐயின் இத்தகைய புதிய கெடுபிடிகளுக்குக் காரணமாக இருக்கலாம்.
2018-ம் ஆண்டு கேப்டனாக இருந்த விராட் கோலி, மனைவி கூட இருப்பதற்கு அனுமதியளித்து கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், வீரர்கள் குடும்பத்துடன் செல்வதால் ‘லக்கேஜ்’ என்ற விவகாரமும் பிசிசிஐ நிர்வாகிகளால் எழுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது வீரர் ஒருவர் 150 கிலோ வரை லக்கேஜ் எடுத்து வருகிறார்கள் என்பது பிசிசிஐ-யின் அதிருப்தியை கிளப்பியுள்ளது.
பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் கடும் அதிருப்தி எழுந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன, அதாவது இவர் முன்னாள் பயிற்சியாளர் ‘கிரெக் சாப்பல்’ பாணியில் செயல்படுகிறார் என்பது குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.
மேலும், தேசிய அணித் தேர்வு குழுவினருக்கான காரில் ஏன் கம்பீரின் காரியதரிசி உட்கார்ந்திருக்கிறார், 3-வது நபர் முன்னிலையில் அணியின் தேர்வுக்குழு முடிவுகளை விவாதிக்கின்றனரா என்பன போன்ற செயல்பாடுகளினால் கம்பீர் மீதும் அதிருப்தி எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment