Published : 10 Jan 2025 06:29 PM
Last Updated : 10 Jan 2025 06:29 PM

என்ன நியாயம் மிஸ்டர் ரவி சாஸ்திரி?! - கோலி, ரோஹித் ஃபார்ம் சர்ச்சை

விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வயதாகி விட்டது. மேலும் அவர்களது ஸ்பான்சர்களைத் திருப்தி செய்யவே அணியில் தக்க வைக்கின்றனர். இருவரும் வீரர்கள் என்பது போய் பிராண்ட் என்றாகி விட்டனர் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், 36-38 வயதாகும் இருவரையும் மீண்டும் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தும் ரவி சாஸ்திரியின் அரசியல் பற்றிய கேள்வி நமக்கு எழுவது இயல்பே.

சஞ்சய் மஞ்சுரேக்கர் அளவுக்குக் கூட ஒரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களைக் கூட பிசிசிஐ மீதோ, அவர்களின் ஸ்பான்சர்களின் அழுத்தம் குறித்தோ வாயே திறக்க மாட்டேன் என்று ரவி சாஸ்திரி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது, பிசிசிஐ, ஒலி/ஒளிபரப்பு உரிமைதார நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் என்று வருவாய் வலைப்பின்னலின் ஊழியராக, முகவர்களாக அனைவரும் மாறிய பின்பு உண்மையை உரக்க இவர்களால் பேச முடியும் என்று நம்பிக்கைக் கொள்வது அசட்டு நம்பிக்கையே.

ஒருபுறம் பெஞ்ச் ஸ்ட்ரெந்த், உள்நாட்டுக் கிரிக்கெட்டில் இத்தனை வீரர்கள் வருகிறார்கள், பிசிசிஐ கதவைத் தட்டுகிறார்கள் என்றெல்லாம் பெருமை அடித்துக் கொள்வது மறுபுறம் விராட் கோலி, ரோஹித் சர்மா எத்தனை மோசமாக ஆடினாலும் இளம் வீரர்கள் வரும் வழியை அடைத்துக் கொண்டிருந்தாலும் status quo-வை பராமரிப்பது, இந்த இரட்டை மனநிலை எப்படி விமர்சனங்களை முன் வைக்கும்?

இப்படிப்பட்ட விமர்சனமற்ற மழுங்கிப்போன ஒரு கூற்றாக்கத்தான் ரவி சாஸ்திரியின் ‘அறிவுரை’யைப் பார்க்க முடிகிறது. ஒருவேளை அப்பாவிகளுக்கு ரவி சாஸ்திரி சொல்வது சரிதானே, உள்நாட்டு கிரிக்கெட் ஆடுவது நல்லதுதானே என்று கூட படலாம். ஆனால் எந்தப் பின்னணியிலிருந்து எந்த விமர்சனமற்ற முனை மழுங்கிய மந்தத் தனத்திலிருந்து இந்த கூற்று வெளிப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.

முதலில் ரவி சாஸ்திரி சொல்வதைக் கேட்போம்: “அனுபவத்துக்கு பதிலீடு இல்லை. ஆனால் அதே வேளையில் நடப்பு ஃபார்ம் மற்றும் ஃபிட்னெஸும் முக்கியம். இடையில் நிறைய ஒருநாள் கிரிக்கெட் வருகிறது. எனவே, அனைத்து ஒருநாள் போட்டிகளையும் நான் கூர்ந்து கவனிக்கப் போகிறேன். சாம்பியன்ஸ் டிராபி, கொஞ்சம் ஐபிஎல் அனைத்தையும் பார்க்கப் போகிறேன். இதோடு அவர்கள் கொஞ்சம் உள்நாட்டுக் கிரிக்கெட்டிலும் ஆட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் போது உள்நாட்டுக் கிரிக்கெட்டையும் ஆட வேண்டும்” என்கிறார் ரவி சாஸ்திரி.

மீண்டும் ஒருநாள் கிரிக்கெட், ஐபிஎல் தான் டெஸ்ட் கிரிக்கெட் ஆட போதுமான ஃபார்ம் என்று அவர் முடிவு கட்டுவது தெரிகிறது. இருப்பினும் உள்நாட்டுக் கிரிக்கெட்டை ஊறுகாய் போல் வைத்திருக்கிறார் ரவி சாஸ்திரி.

நம் கேள்வி எல்லாம் ஒரு புறம் வர்த்தக ரீதியான வாரியங்களின் கூட்டமைப்பான ஐசிசியில் அமர்ந்து கொண்டு பயணத் தொடர்களை டைட் ஆக வைப்பது, இன்னொரு புறம் உள்நாட்டுக் கிரிக்கெட்டிலும் ஆட வேண்டும் என்று நிர்பந்திப்பது. எப்படி ஆட முடியும்?

அதாவது, இந்தக் கேள்வியினால் தான் அவர்கள் இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடாமலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் நீடிக்க விரும்புகின்றனர். ஆஸ்திரேலியாவில் ஆட முடியாவிட்டால் என்ன? இனி அடுத்த பார்டர் கவாஸ்கர் டிராபி எப்போது வருமோ, அதற்குள் நாம் பங்களாதேஷ், ஜிம்பாப்வே, மே.இ.தீவுகளுடன் டெஸ்ட் போட்டியில் ஆடி ரன்களைக் குவித்து விட்டு அதே ‘சூப்பர் ஸ்டார்’ தகுதியைத் தக்க வைத்துக் கொள்ளலாமே.

இந்த மனநிலையை ரவி சாஸ்திரி போன்றோர் கேள்வி கேட்கின்றனரா? ஷுப்மன் கில்லை தயாரித்து தயாரித்து கொண்டு வந்து நிப்பாட்டுகின்றனர், அவர் சொல்லி சொல்லி சொதப்புகிறார். கே.எல்.ராகுல் பாவம், அவர் டவுன் ஆர்டரை மாற்றி குழப்பி விட்டனர் என்று முட்டுக் கொடுக்கின்றனர், அதனால் அவரையும் டிரெஸ் செய்து கிரீசுக்கு அனுப்புகின்றனர், அவரும் பாவம் ஆட முடியாமல் தவிக்கிறார்.

ஆனால், யாராவது ஒருவராவது சர்பராஸ் கானுக்காகப் பேசுகின்றனரா? எந்த அடிப்படையில் ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கொடுக்காமல், அவரை சோதித்துப் பார்க்காமல் அவர் தேற மாட்டார் என்று முடிவுக்கு வர முடியும்? இதற்காக ரவி சாஸ்திரி பேசுகிறாரா என்றால், இல்லை. திரும்பத் திரும்ப கோலி, ரோஹித் சர்மா உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆட வேண்டும், ஐபிஎல்-ல் ஆட வேண்டும், சாம்பியன்ஸ் டிராபியில் ஆட வேண்டும், டெஸ்ட்டில் ஆட வேண்டும் என்று பேசி வருவதெல்லாம் என்ன நியாயம்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x