Published : 10 Jan 2025 08:12 AM
Last Updated : 10 Jan 2025 08:12 AM
மெல்பர்ன்: ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பார்க்கில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான டிரா நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆடவர் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் எதிரெதிர் பகுதியில் இடம் பெற்றுள்ளனர். இதனால் இவர்கள், இறுதிப்போட்டியிலேயே நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு அரை இறுதி சுற்றில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தார் ஜன்னிக் சின்னர். தொடர்ந்து இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை தோற்கடித்து முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைகளில் ஏந்தியிருந்தார். முதல் நிலை வீரராக திகழும் ஜன்னிக் சின்னர் இம்முறை முதல் சுற்று போட்டியில் சிலி வீரர் நிக்கோலஸ் ஜாரியுடன் மோதுகிறார்.
கால் இறுதி சுற்றில் ஜன்னிக் சின்னர், 8-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதக்கூடும். கால் இறுதி சுற்றை ஜன்னிக் சின்னர் கடக்கும் பட்சத்தில் அரை இறுதியில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் பலப்பரீட்சை நடத்தக்கூடும். 5-ம் நிலை வீரரான டேனியல் மேத்வதேவ் தனது முதல் சுற்றில் வைல்டுகார்டு வீரரை சந்திக்கிறார். கால் இறுதி சுற்றில் டேனியல் மேத்வதேவ், 4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை சந்திக்கக்கூடும்.
24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள நோவக் ஜோகோவிச், வைல்டு கார்டு வீரரான அமெரிக்காவின் நிஷேஷ் பசவரெட்டியுடன் மோதுகிறார். ஜோகோவிச், கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடனும், அரை இறுதி சுற்றில் 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவரேவுடனும் பலப்பரீட்சை நடத்தக்கூடும்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா தொடர்ச்சியாக 3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். கடந்த ஆண்டு அவர், இறுதிப் போட்டியில் சீனாவின் ஜெங் கின்வெனை வீழ்த்தியிருந்தார். 2023-ம் ஆண்டும் அரினா சபலென்கா ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடியிருந்தார். இம்முறை சபலென்காவுக்கு போட்டி கடினமாக இருக்கக்கூடும். முதல் சுற்றில் அவர், 2017-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார்.
சபலென்கா அரை இறுதி சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃபுடன் பலப்பரீட்சை நடத்த வாய்ப்பு உள்ளது. கோ கோ காஃப் தனது முதல் சுற்றில் முன்னாள் சாம்பியனான சகநாட்டைச் சேர்ந்த சோபியா கெனினுடன் மோத உள்ளார். 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், செக்குடியரசின் கேத்ரினா சினியகோவாவுடன் மோதுகிறார்.
தாமஸ் மச்சாக்குடன் மோதுகிறார் சுமித் நாகல்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் தனது முதல் சுற்றில் செக் குடியரசின் தாமஸ் மச்சாக்குடன் மோதுகிறார். 27 வயதான சுமித் நாகல், டென்னிஸ் தரவரிசையில் 96-வது இடத்தில் உள்ளார். தாமஸ் மச்சாக் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு சுமித் நாகல் முதல் சுற்றில் 27-ம் நிலை வீரரான கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தியிருந்தார். இதனால் இம்முறையும் சுமித் நாகல் மீது எதிர்பார்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT