Published : 26 Jul 2018 03:52 PM
Last Updated : 26 Jul 2018 03:52 PM

ஹெட்மையரின் அதிரடி சதம், ஹோல்டரின் மறக்க முடியா கடைசி ஓவர்: வங்கதேசத்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

 

அமெரிக்காவில் நடைபெறும் மே.இ.தீவுகள், வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியின் பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மே.இ.தீவுகள் 3 போட்டிகள் கொண்ட தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

மே.இ.தீவுகளில் ஹெட்மையர் 93 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 125 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் பிரமாதமாக இலக்கை விரட்டி 6 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் வரை வந்து போராடி தோல்வி கண்டது.

கடைசி ஓவரில் 7 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்தார் கேப்டன் ஹோல்டர், 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கடைசி ஓவரில் முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டை (68) வீழ்த்தினார் ஹோல்டர், புல்டாஸ் பந்தை குறிபார்த்து நேராக டீப் மிட்விக்கெட் பீல்டர் கைக்கு அடித்தார் முஷ்பிகுர். மொசாடெக் ஹுசைன், மஷ்ரபே மோர்டசா களத்தில் இருந்தனர் அடுத்த 5 பந்துகளில் இவர்களை கட்டுப்படுத்தி 4 ரன்களையே கொடுத்தார் ஹோல்டர். இதற்கு முன்பாக 9 ஓவர்களில் 62 ரன்கள் கொடுத்திருந்த ஹோல்டர் கடைசியில் அடிக்க முடியாத ஒரு பவுலராகியது புரியாத புதிர்தான்.

 

47வது ஓவரில் முஷ்பிகுர் ரஹிம், சபீர் ரஹ்மான் (12) 10 ரன்கள் எடுத்தனர், கீமோ பால் இந்த ஓவரை வீசினார், அடுத்த ஹோல்டர் ஓவரில் 13 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் தேவை. அப்போது 49வது ஓவரில் பவுண்ட்கரிகள் அடிக்க முடியாமல் திணறியது, இதனால் 6 ரன்கள்தான் அந்த ஓவரில் வந்தது. இதே ஓவரின் கடைசி பந்தில் சபீர் ரஹ்மான் ஆட்டமிழக்க, 50வது ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இதில்தான் ஹோல்டர் மறக்க முடியா ஒரு ‘கபில்தேவ்’ ஓவரை வீசி கட்டுப்படுத்தினார்.

ஹெட்மையர் காட்டடி:

மே.இ.தீவுகள் முன்னதாக முதலில் பேட் செய்த போது கிறிஸ் கெய்ல் (29 ரன் 38 பந்து 3 பவுண்டரி 1 சிக்ஸ்), எவின் லூயிஸ் (12) ஆகியோர் எல்.பி.யில் வெளியேறினர், நிறைய டாட் பால்களால் கெய்ல் 14வது ஓவரில் அவுட் ஆனாலும் மே.இ.தீவுகள் ஸ்கோர் 55 ரன்கள் என்று கம்மியாக இருந்தது. 6 பவுண்டரிகளையே இருவரும் அடித்தனர். ஷேய் ஹோப் 43 பந்துகளில் 25 என்று இப்போதைய ‘தோனி’ போல் பேட் செய்து வெறுப்பேற்றினார். மேலும் தடவு தடவென்று தோனி போலவே தடவினார். கடைசியில் ஷாகிப் பந்தில் கவரில் எளிதான கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜேசன்மொகமட் 24 வது ஓவரில் 12 ரன்களில் காலியாக மே.இ.தீவுகள் 102/4 என்று தடுமாறியது.

அப்போது ஹெட்மையர், போவல் இணைந்து 18 ஓவர்களில் 103 ரன்கள் சேர்த்து ஆக்சிஜன் கொடுத்தனர். சிங்கிள்களாகவே ஆடினர். 20-30 ஓவர்களுக்கு இடையில் ஆளுக்கொரு பவுண்டரிதான் அடித்தனர். அடுத்த 10 ஒவர்களில் 58 ரன்களை எடுத்தனர், ஹெட்மையர் 54 பந்துகளில் அரைசதம் கண்டார், பிறகு அடிக்கத் தொடங்கினார். 41, 42, 43வது ஓவர்களில் 3 சிக்சர்களை அடித்தார். 4வது சிக்ஸ் கேட்ச் ஆகியிருக்கும் ஆனால் பின்னாலேயே சென்ற ஷாகிப் கைகள் வழியாக சிக்ஸ் ஆனது, அப்போது ஹெட்மையர் 79-ல் இருந்தார். ஹெட்மையர் கடைசி 10 ஓவர்களில் தனிநபராக வங்கதேசத்தை தாக்கினார். இந்த 10 ஓவர்களில் 6 சிக்சர்களை விளாசினார். ரூபல் ஹுசைன் ஓவரில் 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் சேர்க்க மே.இ.தீவுகள் வெற்றி இலக்கான 271 ரன்களை எட்டியது. 10 வது விக்கெட்டாக ஹெட்மையர் ரன் அவுட் ஆனார். வங்கதேசத்தில் ரூபல் ஹுசைன் 3 விக்கெட்டுகளையும் ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசுர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

வங்கதேசத்தின் விரட்டல் தொய்வடைந்த கதை:

272 ரன்கள் வெற்றி இலக்குடன் தொடங்கிய வங்கதேசம் அனாமுல் ஹக்கின் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் மூலம் அபாரத் தொடக்கம் கண்டது, 9 பந்துகளில் 23 என்று அபாயகரமாகத் திகழ்ந்த போது இவரை ஜோசப் பவுல்டு செய்து வெளியேற்றினார்.

அவர் கொடுத்த தொடக்கத்தின் அதிரடியை தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் தொடர்ந்தனர் 4.4 ஓவர்களில் 50 ரன்களை எட்டினர், வங்கதேசத்தின் அதிரடி அதிவேக முதல் 50 ரன்களாகும் இது. இருவரும் இணைந்து பாயிண்ட், கவர், மிட் ஆஃப் என்று பவுண்டரிகளைச் சாத்த வங்கதேசம் முதல் 10 ஒவர்களில் 79 ரன்கள் எடுத்தது.

ஷாகிப் அல் ஹசன், தமிம் இருவருமே எல்.பி.தீர்ப்புகளை ரிவியூ மூலம் மாற்றி அமைத்தனர், இந்த அதிரடித் தொடக்கம் வீணாக அடுத்த 20 ஓவர்களில் 67 ரன்களை மட்டுமே வங்கதேசம் எடுத்தது. 25வது ஓவரில் பிஷூ 85 பந்துகளில் 54 எடுத்த தமீமை வெளியேற்றினார். ஏதோ பவுலர் கையிலிருந்து பிடுங்கி அடிப்பது போல் மேலேறி வந்து ஸ்டம்ப்டு ஆனார். 72 பந்துகளில் 56 எடுத்த ஷாகிப் அல் ஹசன், நர்ஸ் வீசிய வைடு பந்தை பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

35 ஓவர்களுக்குப் பிறகு தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 7க்கு மேல் சென்றது. மஹ்மதுல்லா, முஷ்பிகுர் இருவரும் நிதானமாக ஆடினர். மஹ்முதுல்லா 39 ரன்களில் மோசமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஹோல்டர் ஷார்ட் பந்தில் முஷ்பிகுர் அடி வாங்கினார். முஷ்பிகுர் ஸ்கூப், புல் என்று பவுண்டரிகளையும் ஜோசப் பந்தை அபாரமாக பிளிக் செய்து சிக்சும் அடித்து நம்பிக்கை அளித்து வந்தார். ஆனால் கடைசி 2 ஒவர்களில் வங்கதேசம் தன் முனைப்பை மறந்தது, கடைசி ஓவரில் ஹோல்டர் அபாரமாக வீசி வங்கதேச வெற்றியைத் தடுத்தார். ஆட்டநாயகனாக ஷிம்ரன் ஹெட்மையர் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x