Published : 07 Jan 2025 07:53 PM
Last Updated : 07 Jan 2025 07:53 PM

“WTC இறுதிப் போட்டியில் ஆஸி.யை வீழ்த்தும் வியூகம் அறிவோம்” - ரபாடா நம்பிக்கை

கேப் டவுன்: நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வீழ்த்துவது எப்படி என்பதை நாங்கள் அறிவோம் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியது. அண்மையில் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை வென்றதன் மூலம் இரண்டாவது அணியாக ஆஸ்திரேலியா தகுதி பெற்றது.

“டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. ஆனால், இந்த போட்டியில் விளையாடுவது பெரிய சந்தர்ப்பம். அதனால் தான் அது எங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை தருகிறது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி என்பது எப்போதும் சுவாரஸ்யமானதாக இருக்கும். ஏனெனில், நாங்கள் களத்தில் ஒரே மாதிரியாக கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடுவோம். நிச்சயம் இந்த இறுதிப் போட்டியில் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் சவால் அளிக்கும் வகையில் விளையாடுவோம். அதனை எங்கள் அணி நன்கு அறிவோம். அதே நேரத்தில் அவர்களை வீழ்த்துவது எப்படி என்பதையும் நாங்கள் அறிவோம்.

நூறு சதவீதம் டெஸ்ட் கிரிக்கெட் உயிர்ப்புடன் உள்ளது. அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த பார்மெட்டில் நாங்கள் இப்போது சிறப்பாக விளையாடி வருகிறோம். எங்கள் அணியின் முன்னாள் வீரர்கள் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்துள்ளனர். கிரிக்கெட் உலகின் சிறந்த வீரர்கள் அக்மார்க் டெஸ்ட் பார்மெட் வீரர்கள் தான்” என ரபாடா தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை தென் ஆப்பிரிக்கா பெறவில்லை. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, தென் ஆப்பிரிக்கா டி20 லீக், ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் அந்த அணியின் வீரர்கள் விளையாட உள்ளனர். இதை கருத்தில் கொண்டு பிரிட்டனில் அயர்லாந்து அல்லது ஆப்கானிஸ்தான் என ஏதேனும் ஒரு அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னர் விளையாடும் திட்டம் இருப்பதாக தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கோனார்ட் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x