Published : 05 Jan 2025 10:19 AM
Last Updated : 05 Jan 2025 10:19 AM
சிட்னி: இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் வென்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸ்திரேலிய அணி முன்னேறியது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வந்தது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி அதன் பின்னர் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியிலும், மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியிலும் எந்த ஒரு கட்டத்திலும் பேட்டிங்கில் போராட்ட குணத்தை வெளிப்படுத்தாமல் தோல்வி அடைந்தது. பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்திருந்தது.
இந்நிலையில், சிட்னியில் நடைபெற்ற கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் ஆஸ்திரேலிய அணி முன்னேறியது.
சிட்னி டெஸ்ட்டில் 162 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 27 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா 41 ரன்களையும், டேவிட் ஹெட் மற்றும் வெப்ஸ்டர் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 34 மற்றும் 34 ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக, இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் 157 ரன்களில் சுருண்டது. ரிஷப் பண்ட் மட்டுமே 61 ரன்கள் சேர்த்தார். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் விராட் கோலி அணியை வழிநடத்தினார்.
மோசமான ஃபார்ம் காரணமாக சிட்னி டெஸ்டில் களமிறக்கப்படாத கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன் ஷிப், இந்திய பேட்டிங் வரிசையில் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாதது, தவறான ஷாட் ஆடுவது மற்றும் ஆஸ்திரேலிய அணியின் அபாரப் பந்து வீச்சு முதலானவையே ஆஸ்திரேலிய அணியிடம் பார்டர் - கவாஸ்கர் டிராபியை இந்திய அணி பறிகொடுக்க காரணங்களாக அமைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT