Published : 04 Jan 2025 07:35 PM
Last Updated : 04 Jan 2025 07:35 PM

உருமாறிய ரிஷப் பண்ட் - முதல் இன்னிங்ஸில் ‘அடி’ வாங்கிய பின் 2-வது இன்னிங்ஸில் ‘அதிரடி’!

சிட்னி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான சனிக்கிழமை மட்டும் 15 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. ஸ்காட் போலண்டின் அசாதாரண துல்லிய பவுலிங்கும், இந்தியா முதல் இன்னிங்ஸ் லீடை பும்ரா இல்லாமலே சாதித்ததும், அனைத்துக்கும் மேலாக ரிஷப் பண்ட்டின் முற்றிலும் அவருடைய பாணியில் அதிரடியாக எடுத்த சாதனை அதிரடி அரைசதமும் பேசுபொருளாகியுள்ளன.

விராட் கோலி வழக்கம் போல் போலண்டிடம் எட்ஜ் ஆகி வெளியேற, இறங்கிய ரிஷப் பண்ட் எதிர்கொண்ட போலண்ட்டின் முதல் பந்தை மேலேறி வந்து நேராக அதிரடி சிக்ஸர் ஒன்றை அடிக்க, ஆஸ்திரேலியாவுக்கு அடிவயிற்றில் புளி கரைய ஆரம்பித்தது.

முன்னதாக, பும்ரா காயம் காரணமாக ஒரு கட்டத்தில் வெளியேற, அவரது வெற்றிடத்தை சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் மிக அருமையாக இட்டு நிரப்பி ஆஸ்திரேலியாவை நம் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 185 ரன்களுக்கும் 4 ரன்கள் குறைவாக 181 ரன்களுக்குச் சுருட்டியது உளவியல் ரீதியாக ஆஸ்திரேலியாவுக்கு முதல் அடி. பிரசித் கிருஷ்ணா, நிதிஷ்குமார் ரெட்டி தங்களிடையே 5 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

பிரசித் கிருஷ்ணா எடுத்த விக்கெட்டுகள் மூன்றும் மிக மிக முக்கியமான விக்கெட்டுகள். ஸ்மித், கேரி, அறிமுக அரைசத நாயகன் பியூ வெப்ஸ்டர் ஆகியோரை வீழ்த்தியது பெரிய அளவுக்கு உதவியது. ரெட்டியின் இரண்டு விக்கெட்டுகளும் முக்கியமானது. காரணம், அவர்களுக்கும் டாப் ஆர்டர் சொதப்ப டெய்ல் எண்டர்கள் தானே பங்களிப்பு செய்து வருகின்றனர்!

மார்னஸ் லபுஷேன் விக்கெட்டை பும்ரா வீழ்த்தி மீண்டும் ஒருமுறை சாம் கான்ஸ்டாஸை ஒரு முறை முறைத்தார். இதன் மூலம் பிஷன் சிங் பேடியின் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் என்ற சாதனையை முறியடித்து 32 விக்கெட்டுகளுடன் இப்போது பும்ரா உள்ளார் .

சிராஜ் சிறுவன் கான்ஸ்டாஸை எட்ஜ் ஆக வைத்தார். அவர் 57 பந்துகளில் 23 ரன்களில் வெளியேறினார். ஸ்மித்தை 10,000 ரன்கள் எடுக்கவிடமால் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். அலெக்ஸ் கேரி பவுல்டு ஆனார். பாட் கமின்ஸையும், ஸ்டார்க்கையும் நிதிஷ் குமார் ரெட்டி வீழ்த்தினார். இவையெல்லாம் சாத்தியமானது ஆக்டிங் கேப்டன் விராட் கோலியால்தான். அவரது கள வியூகமும், பும்ரா இல்லாத குறையைப் போக்கும் விதமாக இருக்கும் பவுலர்களை உசுப்பேற்றியதும் குறிப்பிடத் தகுந்தது.

பண்ட் சாதனை... அரைசத அசாதாரண அதிரடி! சிட்னி பிட்சில் புற்களுடன் சற்றே விரிசல்களும் காணப்பட பந்துகள் எகிறுகின்றன, பிட்ச் ஆட முடியாத ஒரு பிட்ச் ஆக உள்ளது. ஆனால் ஜெய்ஸ்வால் ஆக்ரோஷமாக ஆரம்பித்தார். ஸ்டார்க்குடனான பகைமையை முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் மூலம் முடித்து வைத்தார். ராகுலும் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டினார். ஆனால், இருவரும் ஸ்காட் போலண்டிடம் அவுட் ஆக, கோலியும் அவரிடம் காலியாக பண்ட் இறங்கி முதல் பந்தையே சிக்ஸ் விளாசித் தொடங்கினார்.

முதல் இன்னிங்சில் 98 பந்துகளில் 40 ரன்களை மொஹிந்தர் அமர்நாத் போல் தொசுக்கி தொசுக்கி உடம்பில் அடி வாங்கி விழுப்புண்களுடன் 40 ரன்கள் எடுத்து ஆடியது இந்தப் பிட்சின் தன்மைகளை பண்ட் புரிந்து கொள்ள பெரிய உதவி புரிந்திருக்கும் போலும். இந்த இன்னிங்ஸில் வெப்ஸ்டரின் ஓவரில் மூன்று பவுண்டரிகளைத் தொடர்ந்து விளாசினார். அதில் கீழே விழுந்தபடியே அடித்த அரை புல் அரை ஸ்வீப் ரேம்ப் ஷாட்டும் ஒன்று.

பண்ட் அரைசதம் எடுக்கும் போது மிட்செல் ஸ்டார்க்கை ஹெலிகாப்டர் பிளிகில் சிக்ஸ் விளாசினார். பிறகு அதே ஷாட்டையே அடுத்த பந்தும் ஆடினார், இம்முறை வன்முறை கொஞ்சம் கூடுதல் பந்து மேற்கூரைக்கு அருகே சென்று பார்வையாளர்கள் பக்கம் விழுந்தது. 28 பந்துகளில் இலங்கைக்கு எதிராக எடுத்த அரைசத அதிவேக சாதனையை நெருங்கி இந்த முறை 29 பந்துகளில் எடுத்து இரண்டாவது விரைவு அரைசத சாதனையையும் தன் வசம் கொண்டு வந்தார்.

உடனேயே கமின்ஸ் டி20 ரக பீல்ட் செட்-அப் மேற்கொண்டார். யாரும் அருகில் இல்லை. எல்லாம் பவுண்டரி லைனில் இந்த முறை பண்ட் வெளியே சென்ற பந்தை விரட்டி கேட்ச் ஆனார். அதாவது, இந்த இன்னிங்ஸின் ஸ்பெஷல் என்னவெனில், மட்டையை பந்துக்கு அருகில் கூட கொண்டு செல்லத் தயங்கும் பிட்சில் ரிஷப் பண்ட் அசாதாரணமாக அனாயசமாக ஓர் அதிரடி இன்னிங்ஸை ஆடியது பெரிய இன்னிங்ஸ் வரிசையில் சேர்க்கப்படக் கூடியது.

சச்சின் டெண்டுல்கர் தன் எக்ஸ் பதிவில் பண்ட்டின் இந்த இன்னிங்ஸை பாராட்டிப் பதிவிடுகையில், “பெரும்பான்மையான பேட்டர்கள் 50 அல்லது அதற்கும் கீழான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் எடுத்து வரும் பிட்சில் 184 என்னும் ஸ்ட்ரைக் ரேட்டுடன் அரைசதம் கண்ட ரிஷப் பண்ட்டின் இன்னிங்ஸ் உண்மையில் அபாரமானது.

ஆஸ்திரேலியாவை முதல் பந்திலிருந்தே கலைத்துப் போட்டார். அவர் ஆடுவதைப் பார்ப்பது எப்போதுமே ஒரு சிறந்த பொழுதுபோக்கு. இந்த முறை என்ன ஒரு தாக்கமான இன்னிங்ஸ்!” என்று பதிவிட்டிருப்பது. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல் அமைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x