Published : 03 Jan 2025 04:41 PM
Last Updated : 03 Jan 2025 04:41 PM
சிட்னி டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக இந்திய ஓய்வறையில் குழப்பம் மற்றும் அரசியல் ஏற்பட்டது. ரோஹித் சர்மா உட்காரவைக்கப்பட்ட டிராமா, அவராகவே ஒதுங்கிக் கொண்டதாக ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று கிரிக்கெட்டுக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் ஆட்டத்தின் மீதும் தாக்கம் செலுத்த, இந்திய அணி கிரீன் டாப் சிட்னி பிட்சில் படுமோசமாக ஆடி 185 ரன்களுக்குச் சுருண்டது.
2001 முதல் சிட்னி டெஸ்ட்களில் 2-வது ஆகக் குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோராகும் இது. 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 127 ரன்களுக்குச் சுருண்டதற்குப் பிறகு இப்போது இந்தியா 185 ரன்கள். அன்று பாகிஸ்தான் 127 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவைச் சுருட்டினாலும் முதல் இன்னிங்ஸ் லீடாக 205 ரன்களைப் பெற்றிருந்தும், 2-வது இன்னிங்சில் 176 ரன்கள் இலக்கைக் கூட எடுக்க முடியாமல் 139 ரன்களுக்குச் சுருண்டது.
இந்தியாவின் டாப் ஆர்டர் தேறாது என்பது தெரிந்த கதை. எல்லா மேட்சிலும் ஜெய்ஸ்வாலை நம்பி அவர் மீது அதிக சுமையை ஏற்ற முடியாது. இன்று அது எதிர்மறையாக முடிந்தது. ஸ்காட் போலண்டின் கிரேட் பந்தில் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் எல்லாம் வேஸ்ட் அவுட்தான். கடந்த ஆஸ்திரேலிய தொடர் பார்டர் - கவாஸ்கர் டிராபியில் ஆடிய ரிஷப் பண்ட்டா இது என்ற ஆச்சரியமே தலைதூக்குகிறது. அவருக்கு எந்த மாதிரி ஆட்டம் வருகிறதோ அதை ஆட அவருக்குச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். கவுதம் கம்பீர் அணியின் அனைத்துத் துறை அதிகாரத்தையும் தன்னிடம் குவித்து ஒற்றை அதிகார மையமாகிறார். இது இந்திய அணியின் சீரழிவின் ஆரம்பப் புள்ளி என்பதை எச்சரிக்கையுடன் பிசிசிஐ அணுக வேண்டும்.
கிரீன் டாப் பிட்ச், புதிய கூகாபரா பந்து மிகவும் சிக்கல்களை இந்திய பேட்ஸ்மென்களுக்கு அளிக்கிறது. இதனை கையாளும் திறமை பயிற்சியாளராக கம்பீருக்கு இல்லை. அதனால்தான் ரிஷப் பண்ட்டை அவர் மொஹீந்தர் அமர்நாத் போல் ஆட வைத்ததில் போய் முடிந்து ரிஷப் பண்ட் தனக்கும் திருப்தி அளிக்காமல், அணிக்கும் போதாமல் ஓர் இன்னிங்சை அடி வாங்கி அடிவாங்கி ஆடிவிட்டுச் சென்றிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் கூகபரா பந்து 40 ஓவர்களுக்குப் பிறகே மென்மையாகி விடும். இதனால் ரிஷப் பண்ட், ட்ராவிஸ் ஹெட் போன்றோர் கொஞ்சம் அடித்து ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றி விட முடியும். ஆனால், புதிய பந்தில் இறங்க நேரிட்டால் இவர்கள் ஆடுவது கர்ண கொடூரமாக உள்ளது. மேலும் ரிஷப் பண்ட்டின் ரிஸ்க்கி ஷாட்கள் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்து கொண்டிருந்தது போய், அணியின் சரிவுக்குக் காரணமாகி தோல்வியும் ஏற்படுவதால் அவர் தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.
ஆனால், அவருக்கோ தடுப்பாட்ட உத்திக்கான டெக்னிக் எதுவும் இல்லை. அவருக்கெல்லாம் அட்டாக் தான் சிறந்த தடுப்பாட்டமே. இன்று 98 பந்துகள் ஆடி உடலில் ஏகப்பட்ட அடிகளை வாங்கி சித்ரவதையான ஓர் இன்னிங்சை ஆடிவிட்டுச் சென்றிருக்கிறார். அவரால் அப்படி ஆட முடியவில்லை. மொஹீந்தர் அமர்நாத் போல் அவரால் மட்டும்தான் ஆட முடியும். அமர்நாத் ஹோல்டிங் பந்தில் அடி வாங்கி ரத்தம் சிந்துவார், ஆனால் அடுத்த ஹோல்டிங் பந்துகள் டவரிங் சிக்சர்களாக டீப் பைன் லெக், லாங் லெக் திசைகளில் செல்லும். அது அமர்நாத். ஆனால் ரிஷப் பண்ட் தொடர்ந்து அடிகளை மட்டுமே இன்று வாங்கினார். ஒரு பந்தில் அறிமுக பவுலர் வெப்ஸ்டரை இறங்கி வந்து நேராக சிக்சர் வாங்கினார். அப்போதாவது அவர் உணர்ந்திருக்க வேண்டும், இந்த ஆட்டம்தான் தனக்கு வரும் என்று. ஆனால் கம்பீரின் உருவம் அவர் முன்னால் வந்து நின்று மிரட்டினால் என்ன செய்வார்?
வயிறு, இடுப்பு, கைவிரல்கள், மணிக்கட்டு, தோள்பட்டைக்கு சற்றுக் கீழ் அடி வாங்கி கட்டும் போட்டுக் கொண்டார். ஹெல்மெட்டில் பின்புறம் ஒரு பந்தில் அடி வாங்கினார். ரிஷப் பண்ட்டே ஆட்டம் முடிந்தவுடன், ‘இவ்வளவு அடி வாங்கியதில்லை நான்’ என்றார். இந்திய அணி இன்று ஆடிய டிஃபன்சிவ் ஸ்டைல் இந்த அணிக்குப் பொருந்தி வராது அப்படி ஆடியும் 57/2-லிருந்து 148/8 என்று ஆகும்போது எதற்கு இந்த அசாதாரண தடுப்பாட்ட உத்தி?
ஒரு மகிழ்ச்சியற்ற அணியாக இந்தியா இந்தத் தொடரில் ஆகிவிட்டது. ரோஹித் சர்மாவின் ஆன் ஃபீல்ட் கேப்டன்சி சொதப்பல்கள், டாப் ஆர்டர் பேட்டிங் கொலாப்ஸ், குறிப்பாக ரோஹித் சர்மா, கில், கோலி, பண்ட் என்று தொடர்ச்சியாக சொதப்புவது அணியில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தவில்லை. சாம் கான்ஸ்டாஸ் என்ற வீரர் ரிக்கி பாண்டிங் ஆரம்பகாலத்தில் செய்த, நம் விராட் கோலி இன்னும் செய்து கொண்டிருக்கிற அராத்துச் சேட்டைகளின் விடலைப் பருவத்தில் இருந்துவருகிறார். கடைசியில் தேவையில்லாமல் பும்ராவைச் சீண்டுகிறார். நடுவர் வந்து இருவரையும் பிரித்து விடுகிறார். கடைசியில் என்ன ஆனது கவாஜாவின் கவனம் சிதறி எட்ஜ் ஆகி பும்ராவிடம் மீண்டுமொருமுறை ஆட்டமிழந்தார்.
அரும்புமீசை கான்ஸ்டாசை கேப்டன் கமின்ஸ் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் அந்தச் சிறுவன் ஏகப்பட்ட குறைந்த ஸ்கோர்களில் ஆட்டமிழந்து ஒரு கட்டத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டு விடுவார். ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், விராட் கோலி உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டு இவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஏன் ஸ்ரேயஸ் அய்யர் என்ன பாவம் செய்தார், அவர் ஏன் அணியில் இல்லை.
ஸ்ரேயஸ் அய்யர், சர்பராஸ் கான், துருவ் ஜுரெல் ஆகியோர் மேற்சொன்ன மூவரையும் உடனடியாக ரீப்ளேஸ் செய்ய வெண்டும். கம்பீர் பாசிட்டிவ் ஆக சிந்திக்காமல் அதிகார ஒற்றைமைய குறுக்கல்வாத அணுகுமுறை கொண்டாரென்றால் இந்திய அணி இங்கிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே போல் மே.இ.தீவுகளைப் போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT