Published : 02 Jan 2025 05:00 AM
Last Updated : 02 Jan 2025 05:00 AM
மான்செஸ்டர்: இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்கு உலகளாவிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த போட்டிகளை காண வரும் ஆதரவாளர்கள் தங்களது அணிகளையும், நட்சத்திர வீரர்களையும் ஆதரிக்கும் விதமாக மைதான கேலரிகளில் பாடல்கள் மற்றும் கோஷங்களுடன் கலகலப்பான சூழ்நிலையை உருவாக்குவார்கள்.
போட்டி இல்லாத நாட்களில் கூட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரீமியர் லீக் குறித்தும், கிளப்கள் இடையிலான வீரர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட்டின் ரசிகர் ஒருவர் ஓல்ட் டிராஃபோர்டில் தனக்கு பிடித்த அணியின் விளையாட்டைக் காண மங்கோலியாவில் இருந்து பிரிட்டனுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். 2023-ம் ஆண்டு மே மாதம் மங்கோலியாவின் தலைநகரான உலான்பாதர் நகரில் இருந்து சைக்களில் புறப்பட்ட ஒச்சிர்வானி பேட்போல்ட் என்ற ரசிகர் சுமார் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து ஓல்டு டிராஃபோர்டு நகரை சில தினங்களுக்கு முன்னர் அடைந்தார்.
தொடர்ந்து கடந்த 31-ம் தேதி அங்கு நடைபெற்ற மான்செஸ்டர் யுனைடெட் - நியூகேசில் யுனைடெட் அணிகள் இடையிலான போட்டியை நேரில் கண்டுகளித்தார்.
இதுதொடர்பான அனுபவத்தை ஒச்சிர்வானி பேட்போல்ட் தனது எக்ஸ் வலைதள பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், “ஓல்ட் டிராஃபோர்டில் எனது முதல் போட்டியைக் காண மங்கோலியாவிலிருந்து மான்செஸ்டர் வரை சைக்கிளில் சென்றேன், இது மான்செஸ்டர் யுனைடெட் அணியை நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதற்கான சான்று. இந்த போட்டியை காண அழைத்து செல்வதாக எனது அம்மாவிற்கு சிறு வயதில் நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளேன். எவ்வளவு கடினமான விஷயங்கள் நடந்தாலும், இந்த அணி மீதான எனது அன்பு அசைக்க முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT