Published : 02 Jan 2025 01:50 AM
Last Updated : 02 Jan 2025 01:50 AM
துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 907 புள்ளிகளை குவித்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் 904 புள்ளிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது பும்ரா முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 904 புள்ளிகள் சேர்த்து அஸ்வினின் சாதனையை பும்ரா சமன் செய்திருந்தார். மெல்பர்ன் போட்டியில் பும்ரா இரு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதனால் கூடுதலாக 3 புள்ளிளை பெற்று புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் பும்ரா. இதன் மூலம் உலக அரங்கில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்றவர்களின் பட்டியலில் 17-வது இடத்தை இங்கிலாந்தின் டேரக் அண்டர்வுட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார் பும்ரா.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 15 புள்ளிகளை கூடுதலாக பெற்று 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாட் கம்மின்ஸ், மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். மேலும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் பாட் கம்மின்ஸ் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மெல்பர்ன் போட்டியில் அவர், இரு இன்னிங்ஸையும் சேர்த்து 90 ரன்கள் சேர்த்திருந்தார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 854 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறிய 4-வது இடத்தை பிடித்துள்ளார். மெல்பர்ன் போட்டியில் சதம் விளாசிய நித்திஷ் குமார் ரெட்டி 20 இடங்கள் முன்னேறி 53-வது இடத்தை அடைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT