Published : 01 Jan 2025 12:35 AM
Last Updated : 01 Jan 2025 12:35 AM
இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி, உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான தகுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி 9.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 11 ஆட்டங்களில் அவர், மூன்றை டிரா செய்தார். அவருக்கு அடுத்த படியாக ரஷ்யாவைச் சேர்நத் கேத்ரீனா லக்னோ 8.5 புள்ளிகள் சேர்த்தார். மற்ற 6 வீராங்கனைகள் தலா 6 புள்ளிகளை சேர்த்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி 9-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். கால் இறுதி சுற்றில் வைஷாலி, சீனா கிராண்ட் மாஸ்டரான சூ ஜினருடன் மோதுகிறார்.
வைஷாலி 7 மற்றும் 8-வது சுற்றில் முறையே ஜார்ஜியாவின் நானா ஜாக்னிட்ஜே மற்றும் ரஷ்யாவின் வாலண்டினா குனினா ஆகியோரை வீழ்த்தியிருந்தார். இந்த இரு வெற்றியும் வைஷாலி முதலிடம் பிடிக்க உதவியது. மற்ற இந்திய கிராண்ட் மாஸ்டர்களான திவ்யா தேஷ்முக் 7 புள்ளிகளுடன் 18-வது இடத்தையும், வந்திகா அகர்வால் 7 புள்ளிகளுடன் 19-வது இடத்தையும், ஹரிகா 7 புள்ளிகளுடன் 22-வது இடத்தையும் பிடித்து கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.
ஓபன் பிரிவு தகுதி சுற்றில் உலகின் முதல் நிலை வீரராக நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட 10 பேர் முதலித்தை பகிர்ந்து கொண்டனர். கார்ல்சன் 13 ஆட்டங்களில், 6 ஆட்டங்களை டிரா செய்திருந்தார். இதன் பின்னர் நடைபெற்ற டைபிரேக்கரில் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி 9.5 புள்ளிகளுடன் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்தார். அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா 2-வது இடமும், கார்ல்சன் 3-வது இடமும் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இவர்களுடன் ரஷ்யாவின் வோலோடர் முர்சின், அமெரிக்காவின் ஹான்ஸ் நீமன் மோக், வெஸ்லி சோ, போலந்தின் டூடா ஜான் கிர்ஷ்டோஃப், பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸா ஆகியோரும் கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர்.
முதல் 8 இடங்களுக்குள் வராததால் இந்திய வீரர்கள் கால் இறுதி சுற்றில் நுழையும் வாய்ப்பை இழந்தனர். பிரக்ஞானந்தா 8.5 புள்ளிகளுடன் 23-வது இடத்தையும், ரவுனக் சத்வானி 8 புள்ளிகளுடன் 46-வது இடத்தையும், அர்ஜுன் எரிகைசி 7 புள்ளிகளுடன 64-வது இடத்தையும், அர்விந்த் சிதம்பரம் 7 புள்ளிகளுடன் 68-வது இடத்தையும், வி.பிரணவ் 7 புள்ளிகளுடன் 67-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.
அர்ஜுன் எரிகைசி முதல் 5 சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அதன் பின்னர் அவரிடம் இருந்து மேம்பட்ட திறன் வெளிப்படவில்லை. பிரக்ஞானந்தா கடைசி சுற்றில் ரஷ்யாவின் டேனியல் துபோவிடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்வி பிரக்ஞானந்தா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு தடையாக அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT