Published : 30 Dec 2024 07:51 AM
Last Updated : 30 Dec 2024 07:51 AM

மெல்பர்ன் டெஸ்டில் வலுவான நிலையில் ஆஸி. அணி: இந்தியாவுக்கு 340 ரன்கள் இலக்கு

மெல்பர்ன்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 339 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற 340 ரன்கள் என்ற இலக்கை இந்தியா விரட்டி வருகிறது.

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் கடந்த 26-ம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் சதத்தால் 474 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில், 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று 4-ம் நாள் ஆட்டத்தை நித்திஷ் குமார் ரெட்டி 105 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் தொடங்கினர்.

மேலும் 11 ரன்கள் சேர்த்த நிலையில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 114 ரன்கள் சேர்த்த நிலையில் நித்திஷ் குமார் ரெட்டி, நேதன் லயன் பந்தில் ஸ்டார்க்கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சிராஜ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட், நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்களைச் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 105 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. சாம் கோன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 2-வது இன்னிங்ஸில் பும்ரா, சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய சாம் கோன்ஸ்டாஸை, பும்ரா 8 ரன்களில் போல்டாக்கினார்.

அதேபோல் உஸ்மான் கவாஜாவை 21 ரன்களிலும், ஸ்மித்தை 13 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார் சிராஜ். பின்னர் களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டை 1 ரன்னிலும், மிட்செல் மார்ஷை 0 ரன்னிலும், அலெக்ஸ் கேரியை 2 ரன்களிலும் பெவிலியனுக்கு அனுப்பினார் பும்ரா. இதனால் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாட் கம்மின்ஸும், மார்னஸ் லபுஷேனும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர்.

பின்னர் மார்னஸ் லபுஷேன் 70 ரன்கள் சேர்த்த நிலையில் சிராஜ் பந்தில், எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் லபுஷேன், அரை சதமடித்திருந்தார். 2-வது இன்னிங்ஸிலும் அரை சதம் விளாசி அணி முன்னிலை பெற உதவினார் லபுஷேன்.

பாட் கம்மின்ஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்-அவுட்டானார். இதனால் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நேதன் லயனும், ஸ்காட் போலண்டும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

ஆட்டநேர இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 228 ரன்கள் எடுத்து 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. லயன் 41 ரன்களும், போலண்ட் 10 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். பும்ரா 4, சிராஜ் 3, ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

339 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி கடைசி நாளான இன்று மேற்கொண்டு 6 ரன்களை சேர்த்தது. லயன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். 340 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வரும் இந்திய அணி உணவு நேர இடைவேளையின் போது 26.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 9 ரன்கள், ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும், கோலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மெல்பர்ன் மைதானத்தில் 4-வது இன்னிங்ஸ் விளையாடுவது கடினம் என்பதால், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கியுள்ளது என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடைசி ஒரு நாள் ஆட்டம் முழுவதையும் இந்திய வீரர்கள் தாக்குப்பிடித்து விளையாடினால் மட்டுமே இந்தப் போட்டியை டிரா செய்ய முடியும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டால், அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கு தடையாக இருக்கும்.

இந்திய வீரர்களை சோதித்த லயன்-போலண்ட் ஜோடி: 9-வது விக்கெட் விழுந்ததும் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது என்று இந்திய அணியினர் நினைத்தனர். ஆனால் நேதன் லயனும், போலண்டும் அபாரமாக விளையாடி இந்திய வீரர்களின் பொறுமையை வெகுவாக சோதித்தனர்.

நேதன் லயன் அடித்து விளையாட, மறுமுனையில் போலண்ட் தற்காப்பு ஆட்டத்தை விளையாடினார். 4-ம் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை பும்ரா வீச அந்த ஓவரின் 4-வது பந்தை அடித்து விளையாடினார் லயன். ஆனால் அந்த பந்து மட்டையில் பட்டும் 3-வது சிலிப்பில் கேட்ச் ஆனது. இதையடுத்து இந்திய வீரர்கள் கொண்டாடினர். ஆனால், அந்த பந்தை நடுவர் நோ-பால் என அறிவித்தார். இதனால் லயன் தப்பித்தார்.

2 இன்னிங்ஸிலும் 50-க்கும் அதிகமான பந்துகளை சந்தித்த ஜோடி: டெஸ்ட் போட்டிகளின் 2 இன்னிங்ஸ்களிலும் கடைசி விக்கெட்டுக்கு 50-க்கும் அதிகமான பந்துகளைச் சந்தித்து ஆட்டமிழக்காமல் இருந்த வீரர்கள் வரிசையில் நேதன் லயன், ஸ்காட் போலண்ட் சேர்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 8.3 ஓவர்கள் வரை அவர்கள் ஆட்டமிழக்காமல் விளையாடினர். 2-வது இன்னிங்ஸில் 17.4 ஓவர்கள் விளையாடி 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் நேதன் லயனும், போலண்டும் உள்ளனர். இந்த வரிசையில் பாகிஸ்தானின் அபாக் ஹுசைன், ஹசீப் அஹ்சான் ஜோடி 2 இன்னிங்ஸ்களிலும் 50-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்து முதலிடத்தில் உள்ளது.

1961-ல் இங்கிலாந்துக்கு எதிராக லாகூரில் நடைபெற்ற போட்டியில் இந்த ஜோடி முதல் இன்னிங்ஸில் 9.2 ஓவர்கள் வரையும், 2-வது இன்னிங்ஸில் 18.1 ஓவர்கள் வரையும் விளையாடியது.

கம்மின்ஸை அதிக முறை வீழ்த்திய ஜடேஜா: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா அதிக முறை வீழ்த்தியுள்ளார். இதுவரை 16 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ஜடேஜா, கம்மின்ஸுக்கு 194 பந்துகளை வீசி 79 ரன்களைக் கொடுத்துள்ளார். அதே நேரத்தில் 9 முறை அவரை அவுட்டாக்கியுள்ளார். ஜடேஜாவின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவரால் அதிக முறை ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட வீரரும் கம்மின்ஸே ஆவார்.

ஹெட்டுக்கு சவாலாக விளங்கும் பும்ரா: டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6 முறை ஆட்டமிழக்கச் செய்து அவருக்கு சவாலாக விளங்கி வருகிறார் பும்ரா. இதுவரை, அவருக்கு 16 இன்னிங்ஸ்களில் 220 பந்துகள் வீசி 133 ரன்களைக் கொடுத்துள்ள பும்ரா, அவரை 6 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

200 டெஸ்ட் விக்கெட்கள்: டிராவிஸ் ஹெட்டை வீழ்த்தியதும், டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்கள் என்ற மைல்கல்லைத் தொட்டார் பும்ரா. தனது 44-வது டெஸ்ட் போட்டியிலேயே இதை அவர் சாதித்துள்ளார். மேலும் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் (பந்துகள் கணக்கில்) வரிசையில் அவர் 4-வது இடத்தில் (8,484 பந்துகள்) உள்ளார்.

முதல் 3 இடங்களில் வக்கார் யூனுஸ் (பாகிஸ்தான்), டேல் ஸ்டெயின் (தென் ஆப்பிரிக்கா), காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா) உள்ளனர்.

அதிக சராசரி... அதேபோல், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சராசரியுடன் 200 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரராக பும்ரா உள்ளார். மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர், கர்ட்லி அம்ப்ரோஸ் (அனைவரும் மேற்கு இந்தியத் தீவு அணி முன்னாள் வீரர்கள்) ஆகியோரை விட பந்துவீச்சு சராசரியில் பும்ரா முந்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யாரும் பும்ரா அளவுக்கு சிறப்பான சராசரியை வைத்திருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பும்ராவின் தற்போதைய சராசரி 19.5 மட்டும் தான். இதன் மூலம் அவர் மால்கம் மார்ஷல் (20.9), ஜோயல் கார்னர் (21.0) மற்றும் கர்ட்லி அம்ப்ரோஸ் (21.0) ஆகியோரை விட சிறப்பான சராசரியை பெற்று 200 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x