Published : 29 Dec 2024 12:46 AM
Last Updated : 29 Dec 2024 12:46 AM
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நித்திஷ் குமார் ரெட்டியின் சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அரை சதம் ஆகியவற்றால் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்தது.
மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4, ஜடேஜா 3, ஆகாஷ் தீப் 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா 3, கே.எல்.ராகுல் 24, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82, விராட் கோலி 36, ஆகாஷ் தீப் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிஷப் பந்த் 6, ரவீந்திர ஜடேஜா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ரிஷப் பந்த் 37 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்காட் போலண்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஸ்காட் போலண்ட் அரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து வீசிய பந்தை ரிஷப் பந்த், ஃபைன் லெக் திசையை நோக்கி ஸ்கூப் ஷாட் விளையாடினார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு டீப் தேர்டுமேன் திசையில் நின்ற நேதன் லயனிடம் கேட்ச் ஆனது. அப்போது இந்திய அணி 191 ரன்கள் எடுத்திருந்தது. அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்த நேரத்தில் ரிஷப் பந்த் மேற்கொண்ட இந்த ஷாட் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. 283 ரன்கள் பின்தங்கிய நிலையில் நித்திஷ் குமார் ரெட்டி களமிறங்கினார்.
ரவீந்திர ஜடேஜா 51 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தை தடுப்பாட்டம் மேற்கொண்ட போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி பாலோ ஆனை தவிர்ப்பதற்கு 54 ரன்கள் தேவையாக இருந்தது. 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் உதவியுடன் நித்திஷ் குமார் ரெட்டி அபாரமாக விளையாடி ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். நேதன் லயன் வீசிய 67-வது ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசிய அசத்திய நித்திஷ் குமார், 81 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
இந்திய அணி 83.5-வது ஓவரில் 275 ரன்களை எட்டி பாலோ-ஆனை தவிர்த்தது. தொடர்ந்து இந்த ஜோடி பொறுமையாக செயல்பட்டு அடிக்க வேண்டிய பந்துகளை மட்டுமே அடித்து ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் சீரான திசையிலும், சிறந்த லெந்த்திலும் வீசி நெருக்கடி கொடுத்தனர். ஆனால் அவற்றை நித்திஷ் குமாரும், வாஷிங்டன் சுந்தரும் அற்புதமாக கையாண்டனர். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் நிதிஷ் ரெட்டி சில கம்பீரமான ஸ்ட்ரோக்குகளை விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இந்த ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலிய அணி கள வியூகங்களை மாற்றிக் கொண்டே இருந்தது. பந்து வீசும் கோணங்களை மாற்றியது, ஷார்ட் பால் தந்திரத்தை முயற்சித்தது, ஆனால் இருவரிடமும் அதற்கு பதில் இருந்தது. நித்திஷ் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 92-வது ஓவரில் 300 ரன்களை கடந்தது. தனது 4-வது அரை சதத்தை விளாசிய வாஷிங்டன் சுந்தர் 162 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன், 50 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தில், சிலிப் திசையில் நின்ற ஸ்டீவ் ஸ்மித்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
8-வது விக்கெட்டுக்கு நித்திஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஜோடி 47.5 ஓவர்கள் களத்தில் நிலைபெற்று 127 ரன்கள் குவித்தது. அப்போது நித்திஷ் குமார் ரெட்டி 97 ரன்களில் இருந்தார். இதையடுத்து ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்கினார். ஸ்காட் போலண்ட் வீசிய 113-வது ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் சேர்த்த நித்திஷ் குமார் சதத்தை நெருங்கினார். பாட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரின் 3-வது பந்தில் பும்ரா ரன் ஏதும் எடுக்காத நிலையில் முதல் சிலிப் திசையில் நின்ற உஸ்மான் கவாஜாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க நித்திஷ் குமாருக்கு சதம் அடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற சூழ்நிலை உருவானது. கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது சிராஜ், பாட் கம்மின்ஸ் வீசிய அந்த ஓவரின் எஞ்சிய 3 பந்துகளையும் சமாளித்து தாக்குப்பிடித்தார். இதையடுத்து ஸ்காட் போலண்ட் வீசிய அடுத்த ஓவரின் 3-வது பந்தை நித்திஷ் குமார் மிட் ஆன் திசையில் தூக்கி அடிக்க பவுண்டரியாக மாறியது. இதனால் நித்திஷ் குமார் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். 171 பந்துகளை சந்தித்த நித்திஷ் குமார் ரெட்டி 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் சதத்தை கடந்தார்.
இந்திய அணி 116 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை குறுக்கிட்டதால் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. நித்திஷ் குமார் ரெட்டி 105 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், நேதன் லயன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை சந்திக்கிறது இந்திய அணி.
3-வது இளம் வீரர்: மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் 21 வயதான இந்திய அணியின் மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி சதம் விளாசினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய இளம் வீரர்களில் அறிமுக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார் நித்திஷ் குமார் ரெட்டி (21 வயது 216 நாட்கள்). இந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் (18 வயது, 256 நாட்கள்), ரிஷப் பந்த் (21 வயது 92 நாட்கள்) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை: மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய நித்திஷ் குமார் ரெட்டியை பாராட்டி உள்ள ஆந்திரபிரதேச மாநில கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஊக்கத் தொகையாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT