Published : 27 Dec 2024 12:44 AM
Last Updated : 27 Dec 2024 12:44 AM
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் கான்ஸ்டாஸ் டி 20 பாணியில் விளையாடி 60 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.
மெல்பர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் 19 வயதான தொடக்க பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் இடம் பெற்றார். இந்திய அணியில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.
பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா, கான்ஸ்டாஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தது. ஜஸ்பிரீத் பும்ரா வீசிய 7-வது ஓவரின் 2-வது பந்தை கான்ஸ்டாஸ் எந்தவித பயமின்றி ரீவர்ஸ் ஸ்கூப் ஷாட் விளையாடி சிக்ஸர் விளாசினார். இதே ஓவரில் கான்ஸ்டாஸ் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் மூலம் 2 பவுண்டரிகளையும் விரட்டினார். அவரது துணிச்சலான பேட்டிங் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து பும்ரா வீசிய 11-வது ஓவரின் 4-வது பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி அசத்தினார் கான்ஸ்டாஸ்.
அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 52 பந்துகளில், 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் அரை சதம் விளாசினார். 19.2 ஓவர்களில் 89 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்தார். சாம் கான்ஸ்டாஸ் 65 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய மார்னஷ் லபுஷேன், உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். தனது 27-வது அரை சதத்தை கடந்த கவாஜா 121 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வீசிய பந்தை புல்ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் சரியாக சிக்காமல் ஷார்ட் மிட்விக்கெட் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் எளிதாக தஞ்சம் அடைந்தது.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 150 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், லபுஷேனுடன் இணைந்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். நிதானமாக விளையாடிய லபுஷேன் 114 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் தனது 22-வது அரை சதத்தை கடந்தார். சிறப்பாக பேட் செய்து வந்த மார்னஷ் லபுஷேன் 145 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தை மிட்-ஆஃப் திசையில் விளாசிய போது விராட் கோலியிடம் கேட்ச் ஆனது.
3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 127 பந்துகளில், 83 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 7 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் போல்டானார். இதன் பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 4 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். 9 ரன்கள் இடைவேளையில் இந்த 3 விக்கெட்களும் வீழ்ந்திருந்தது.
இதையடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி 41 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்தில், ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சீராக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 71 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் தனது 42-வது அரை சதத்தை கடந்தார். இதன் பின்னர் அவர், தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 86 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. ஸ்மித் 111 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களும், பாட் கம்மின்ஸ் 8 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி.
ஏமாற்றம் அடைந்த ஹெட்: இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் அதிரடியாக விளையாடி சதம் விளாசிய டிராவிஸ் ஹெட், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டில் வெளியேறினார். பும்ரா வீசிய பந்து பவுன்ஸாக செல்லும் என கணித்து இரு கைகளையும் தூக்கியவாறு பந்தை தொடாமல் விட்டார் ஹட். ஆனால் பந்து ஆஃப் ஸ்டெம்பின் மேல் பகுதியை தாக்கியது. இதனால் சோகத்துடன் நடையை கட்டினார் டிராவிஸ் ஹெட்.
87,242 ரசிகர்கள்: மெல்பர்ன் மைதானத்தில் நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி தொடங்கியது. தொடக்க நாளில் இந்த போட்டியைகாண்பதற்காக மைதானத்துக்கு 87,242 பேர் வருகை தந்திருந்தனர். இரு அணிகள் இடையிலான போட்டியை காண வந்த ரசிகர்களின் எண்ணிக்கையில் இது சாதனையாக அமைந்தது.
முதன் முறையாக 38: டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா நேற்று தனது முதல் ஸ்பெல்லில் 6 ஓவர்களை வீசி 38 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். பும்ரா தனது முதல் ஸ்பெல்லில் அதிக ரன்களை வழங்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.
ஸ்கூப் ஷாட் விளையாடியது எப்படி? - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான சாம் கான்ஸ்டாஸ் பும்ரா வீசிய தொடக்க ஓவரில் 4 முறை பீட்டன் ஆனார். பும்ரா வீசிய முதல் 3 ஓவர்களில் 7 முறை கான்ஸ்டாஸ் பீட்டன் ஆனார். இதில் அடிக்க தவறிய இரண்டு ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்களும் அடங்கும். ஆனால் கான்ஸ்டாஸ் சிறிதும் கலங்கவில்லை. அச்சமின்றி மட்டையை சுழற்றி 60 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டத்துக்கு பின்னர் சாம் கான்ஸ்டாஸ் கூறும்போது,“ பும்ரா பந்து வீச்சுக்கு எதிராக நான் விளையாடிய ஸ்கூப் ஷாட்களில் அவுட் ஆகியிருந்தால் அது முட்டாள்தனமானதாக மாறியிருக்கும். ஆனால் நான் அந்த ஷாட்டை மேற்கொள்வதற்காக கடினமான பயிற்சிகள் மேற்கொண்டேன்.
இது உண்மையில் எனக்கு ஒரு பாதுகாப்பான ஷாட் என்று உணர்கிறேன். நான் நினைக்கும் வழியில் பந்துவீச்சாளருக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறேன். அந்த வகையில் ரன்கள் சேர்த்தது சிறப்பானதுதான். பும்ரா, ஒரு ஜாம்பவான். அவருக்கு எதிராக சிறிது அழுத்தம் கொடுக்க முயற்சி செய்தேன். அதுபலன் கொடுத்தது. ஆனால், அவர் 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றம் செய்துவிட்டார். வேகப்பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் விளையாடுவது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான்” என்றார்.
3-வது விரைவு அரை சதம்: அறிமுக வீரரான ஆஸ்திரேலியாவின் சாம் கான்ஸ்டாஸ் 52 பந்துகளில் அரை சதம் அடித்தார். அறிமுக போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனால் விரைவாக அடிக்கப்பட்ட 3-வது அரை சதமாக இது அமைந்தது. இதற்கு முன்னர் அறிமுக போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் 46 பந்துகளிலும், ஆஷ்டன் அகர் 50 பந்துகளிலும் அரை சதம் அடித்திருந்தனர்.
ஒரே ஓவரில் 18: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வீசிய 11-வது ஓவரில் சாம் கான்ஸ்டாஸ் 18 ரன்களை விளாசினார். பும்ராவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அவர், விட்டுக்கொடுத்தது இதுவே முதன்முறை.
மீண்டு வந்த பும்ரா.. சாம் கான்ஸ்டாஸின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. அவரது மட்டை வீச்சால் உஸ்மான் கவாஜா, லபுஷேன், ஸ்மித் ஆகியோர் அழுத்தமின்றி விளையாடி அரை சதம் கடந்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 237 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவாக இருந்தது. அதன் பின்னர் பும்ரா மேற்கொண்டு இரு விக்கெட்களை (டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்) வீழ்த்தி இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தை இழுத்தார்.
4,562 பந்துகளுக்கு பிறகு... கடந்த 2021-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன், பும்ராவுக்கு எதிராக சிக்ஸர்அடித்திருந்தார். இதன் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா வீசிய 4,562 பந்துகளில் சிக்ஸர் அடிக்கப்படாத நிலையில் நேற்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்டில் சாம் கான்ஸ் டாஸ் சிக்ஸர் அடித்துள்ளார். இதுவரை டெஸ்டில் பும்ரா பந்து வீச்சில் ஒட்டுமொத்தமாக 9 சிக்ஸர்களே அடிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்தின் ஜாஸ் பட்லரும், தற்போது சாம் கான்ஸ்டாஸும் தலா 2 சிக்ஸர்களை அடித்தவர்களாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT