Published : 26 Dec 2024 07:49 PM
Last Updated : 26 Dec 2024 07:49 PM
மெல்பர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், தன் மீது கோலி தற்செயலாக தோளோடு தோள் மோதி இருக்கலாம் என நினைப்பதாக ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (டிச.26) இந்திய நேரப்படி அதிகாலை இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். எஞ்சியுள்ள ஆஸ்திரேலியாவின் நான்கு விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்த வேண்டுமென்பதே இப்போதைக்கு இந்தியாவின் திட்டமாக இருக்கும்.
கடந்த மூன்று போட்டிகளாக ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் அதை மாற்றும் வகையில் 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். அவர் மீது அணியின் கேப்டன், அணி வீரர்கள், தேர்வு குழுவினர், பயிற்சியாளர்கள் வைத்த நம்பிக்கையை சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸில் கான்ஸ்டாஸ் நிறைவேற்றி உள்ளார்.
65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அன்-ஆர்தோடெக்ஸ் முறையில் ஷாட்கள் ஆடி இந்திய பவுலர்களை அச்சுறுத்தினார். அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின் வருங்காலம் என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டி உள்ளார். அவரது அந்த ரன்கள் பேட்டிங் ஆர்டரில் அடுத்தடுத்து வரும் வீரர்கள் நிதானமாக ரன் குவிக்க உதவியது. கவாஜா, லபுஷேன், ஸ்மித் ஆகியோரின் ஆட்டத்தை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்தச் சூழலில் தான் அவர் பேட் செய்த போது அந்தச் சம்பவம் நடந்தது. முதல் இன்னிங்ஸில் 10-வது ஓவர் முடிந்ததும் ஒரு எண்டில் இருந்து மற்றொரு எண்டுக்கு வீரர்கள் மாறிய போது இந்திய வீரர் கோலி, கான்ஸ்டாஸின் தோள்பட்டையில் மோதினார். ‘கோலி வேண்டுமென்றே இதை செய்தார்’ பாண்டிங் குற்றம் சாட்டினார். அதையே ஊடகங்களும் தெரிவித்தன. கோலியின் நன்னடத்தை விதிமீறலுக்காக இந்த போட்டியின் ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
இந்தச் சூழலில் இது குறித்து சாம் கான்ஸ்டாஸ் தனது கருத்தை தெரிவித்தார். “நான் எனது கிளவ்களை (கையுறை) சரி செய்து கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக தான் அவர் என்னை மோதினார் என நினைக்கிறேன். அது களத்தின் அப்போதைய பதற்றம் என நினைக்கிறேன். வெறும் கிரிக்கெட் தான் வேறு எதுவும் இல்லை. எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் சிறந்த வெர்ஷனை கொண்டு வர விரும்பினேன். அதிர்ஷ்டவசமாக இன்று ரன் குவிக்க முடிந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
"That's just Cricket"- #SamKonstas clears the air on the Kohli incident! #AUSvINDOnStar 4th Test, Day 2 | FRI, 27th DEC, 5 AM pic.twitter.com/dQGIAy8fm7
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT