Published : 26 Dec 2024 11:50 AM
Last Updated : 26 Dec 2024 11:50 AM

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

மெல்பர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் 19 வயது அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸின் தோள்பட்டையில் வேண்டுமென்றே கோலி மோதினார். அதன் பின்னர் இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இது கோலிக்கு சிக்கலை கொடுக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஐசிசி விதிகள் சொல்வது என்ன என்பதை பார்ப்போம்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு வெற்றியை பெற்றன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் நான்காவது போட்டி மெல்பர்னில் இன்று தொடங்கியது.

இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். அவர் குறித்து ஆஸி. அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்ட், “உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸை தொடக்க ஆட்டக்காரராக ஆட வைப்பதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. அவர் இதற்கு பொருத்தமாக இருப்பாரா என்பதை ஆஸி. தேர்வுக் குழு தான் முடிவு செய்ய வேண்டும்” என கடந்த அக்டோபர் மாதம் சொல்லி இருந்தார். அதை இந்து தமிழ் திசையில் பதிவு செய்திருந்தோம்.

பயிற்சியாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கி உள்ளது. மெல்பர்னில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசினார். பும்ரா வீசிய பந்தில் சிக்ஸர் விளாசி கலக்கினார். ‘பும்ராவை எதிர்கொள்ள என்னிடம் திட்டம் உள்ளது’ என அவர் அண்மையில் சொல்லி இருந்தார். 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் மெல்பர்ன் போட்டியில் அதிரடியாக ஆடி அவர் ரன் குவித்த சமயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சாம் கான்ஸ்டாஸ் உடன் தோளோடு தோள் மோதினார். அதன் பின்னர் இருவரும் காட்டமாக வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தலையிட்டு சமாதானம் செய்தார். இந்த சம்பவம் 10-வது ஓவர் முடிந்ததும் நடந்தது. ஸ்லிப் பீல்டராக நின்ற கோலி ஒரு எண்டில் இருந்து மற்றொரு எண்டுக்கு மாறும் போது இதை செய்திருந்தார்.

ஐசிசி விதி சொல்வது என்ன? - களத்தில் ஒரு வீரர் மற்றொரு வீரருடன் வேண்டுமென்றே மோதினாலோ அல்லது உடல் ரீதியான தொடர்பை மேற்கொண்டாலோ அது லெவல் 2 அஃபென்ஸ் ஆகும். இது குறித்து கள நடுவர்கள் போட்டியின் ரெஃப்ரி இடம் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட வீரரின் நடத்தையை அடிப்படையாக கொண்டு இறுதி முடிவு எடுப்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x