Published : 25 Dec 2024 12:05 PM
Last Updated : 25 Dec 2024 12:05 PM

மீண்டும் சோதனை தரும் பிட்ச் - மெல்பர்னில் இந்திய பேட்டர்கள் மீண்டெழுவார்களா?

பேட்டிங் பயிற்சியில் ஜெய்ஸ்வால்

பெர்த், அடிலெய்ட், பிரிஸ்பன் டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து மெல்பர்னிலும் கிரீன் டாப் பிட்ச்சில் வேகம் எழுச்சி கொண்ட பந்துகளை பேட்டர்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்று பிட்ச் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி டிரா ஆனது. இந்நிலையில், நாளை (டிச.26) மெல்பர்னில் நான்காவது போட்டி நடைபெறுகிறது. இதற்கு இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மெக்டொனால்ட் பிட்ச் பற்றிக் கூறும்போது, “முந்தைய சில ஆண்டுகளில் இருந்தது போல் இருக்கிறது. போட்டித் தொடங்கும் நாளன்று எடுக்கும் முடிவு பெரிய முடிவாக இருக்கும். மரபாக இந்தப் பிட்ச் முதலில் பவுலிங் செய்வதற்கான பிட்ச்தான். ஆனால் வெயில் கடுமை காரணமாக கேப்டன்கள் டாஸ் முடிவை தீர்க்கமாக சிந்தித்து எடுக்க வேண்டும்.

2018-19 தொடரில் பெர்த்தில் வேகப்பந்து வீச்சில் சிக்கி தோல்வி அடைந்து மெல்பர்னுக்கு இந்திய அணி வந்தது. புஜாரா 11 மணி நேரம் ஆடினார். இந்தியா சுமார் 170 ஓவர்கள் பேட் செய்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிறகு பிட்ச்சில் பந்துகள் எழுச்சியும் தாழ்ச்சியுமாகச் செல்ல பும்ரா தன் அற்புதமான பவுலிங்கில் ஆஸ்திரேலிய பேட்டர்களை துச்சமாக்கினார். பும்ரா 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, 151 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா.

2-வது இன்னிங்ஸில் பாட் கமின்ஸ் 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்க்க இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 399 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய ஆஸ்திரேலியா ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, ரவீந்திர ஜடேஜாவிடம் சரணடைந்து 261 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.

2020 தொடரில் அதே போல் கோலி கேப்டன்சியில் அடிலெய்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, எழும்புமா இந்தியா என்ற கேள்விகளுக்கு இடையில் கோலி இல்லாமல் ரஹானேவின் மேட்ச் வின்னிங் 124 ரன்களுடன் இந்தியா அபார வெற்றி பெற்றது. பும்ரா, சிராஜ், அஸ்வின், ஜடேஜா சிறப்பாக பந்து வீசினர். மெல்பர்ன் டிராப் இன் பிட்ச்களையே மீண்டும் உயிர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் 2021-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டன.

இப்போதெல்லாம் பிட்ச்சில் கொஞ்சம் அதிகமாக புற்களை வளர்க்கிறார்கள், இதனால் பழைய மெல்போர்ன் பிட்ச் போல் இது மெதுவான பிட்ச் ஆக இருக்காது. த்ரில்லிங்கான, சவாலான போட்டியாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 10-12 மிமீ புல் வளர்த்தனர். 2021 ஆஷஸ் தொடரில் ஸ்காட் போலண்டிடம் இங்கிலாந்து சிக்கி 2-வது இன்னிங்ஸில் 68 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. போலண்ட் 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போது இந்தியாவுக்கு எதிராகவும் ஹாசில்வுட் இல்லாத நிலையில் ஸ்காட் போலண்ட் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளார்.

இதற்கு அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புல்லை மீண்டும் கட் செய்து 6 மிமீ ஆகக் குறைத்தார் பிட்ச் கியூரேட்டர், இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா தன் சொந்த பலவீனங்களால் முதல் நாளில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேமரூன் கிரீன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-ம் நாள் 40 டிகிரி வெயிலில் டேவிட் வார்னர் இரட்டைச் சதம் விளாச ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிறகு தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இதே போன்ற ஆடுகளத்தை பிட்ச் கியூரேட்டர் வடிவமைத்தார். பாகிஸ்தான் பந்து வீச்சு அருமையாக இருந்தது. டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார்கள். ஆனால் எப்படியோ ஆஸ்திரேலியா 318 ரன்களை அடித்து விட்டனர். பாகிஸ்தான் தொடர்ந்து ஆடி 264 ரன்களையே அடிக்க முடிந்தது பாட் கமின்ஸ் 5 விக்கெட். தொடர்ந்து ஆஸ்திரேலியா அட்டகாசமான பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளுக்கு 16 ரன்கள் என்று சரிவு கண்டது. ஆனால் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் எடுக்க மிட்செல் மார்ஷ் 96 ரன்களை எடுக்க மீண்ட ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 317 ரன்கள். அந்த அணி ஷான் மசூத், பாபர் அசாம், ரிஸ்வான், சல்மான் அகா மூலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து வெற்றியை நோக்கிப் பயணித்தது. ஆனால், கம்மின்ஸின் அசாதாரணப் பந்து வீச்சு பாகிஸ்தானை 237 ரன்களுக்குக் காலி செய்தது. எனவே இந்தப் பிட்சும் வேகம், பவுன்ஸிற்குக் குறைவில்லாத பிட்ச்தான். அதனால் டாஸ் வென்றால் ரோஹித் சர்மா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தால் மட்டும் போதாது, ஆஸ்திரேலியாவை எழும்ப விடாமல் அட்டாக் செய்து 250 ரன்களுக்குள் முடிக்க வேண்டும். பிறகு பேட்டிங்கில் எப்படியாவது 375-400 ரன்களை எடுத்து விட்டால் வெற்றி இந்தியா பக்கம் தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x