Published : 25 Dec 2024 08:03 AM
Last Updated : 25 Dec 2024 08:03 AM

ஜெய்ஸ்வால், கில், பந்த் உள்ளிட்டோருக்கு ஆலோசனைகள் வழங்கி பேட்டிங்கை சிக்கலாக்கி விடக்கூடாது: சொல்கிறார் ரோஹித் சர்மா

மெல்பர்ன்: இந்திய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதையடுத்து பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில் முடிவடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது. 4-வது டெஸ்ட் மெல்பர்ன் நகரில் நாளை (26-ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவானதாக செயல்படவில்லை.

முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் இன்னிங்ஸில் இரட்டை இலக்கை ரன்களை கூட எட்டாமல் ஆட்டமிழந்தார். பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 161 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஜெய்ஸ்வாலிடம் இருந்து அடுத்த இரு ஆட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை.

இதேபோன்று ஷுப்மன் கில்லின் பேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத அவர், அதன் பின்னர் பங்கேற்ற 2 போட்டிகளிலும் கூட்டாக 60 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இது ஒருபுறம் இருக்க கடந்த சுற்றுப்பயணத்தில் மேட்ச் வின்னராக திகழ்ந்த ரிஷப் பந்த் இம்முறை 19.20 சராசரியுடன் 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மெல்பர்ன் மைதானத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் ஆகியோர் ஒரே படகில் உள்ளனர். தங்களால் என்ன செய்ய முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். அந்த விஷயங்களை சிக்கலாக்கக்கூடாது. ஜெய்ஸ்வால் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறார். அவர், தனது திறமையை ஏற்கனவே நிரூபித்துள்ளார். அவரிடம் நிறைய திறமை உள்ளது, அவரைப் போன்ற ஒரு வீரர் அணியில் இருக்கும்போது, அவரது மனநிலையை அதிகம் சிதைக்கக்கூடாது.

அவர், முடிந்தவரை சுதந்திரமாக இருக்கட்டும், அவரது பேட்டிங் குறித்து அதிக யோசனைகளை கூறி அவருக்கு அதிக சுமை கொடுக்க வேண்டாம். எங்களில் எவரையும் விட அவர், தனது பேட்டிங்கை நன்கு புரிந்துகொள்கிறார், அப்படித்தான் அவர், தனது கிரிக்கெட்டை விளையாடியுள்ளார். ஜெய்ஸ்வாலால் தாக்குதல் ஆட்டமும் மேற்கொள்ள முடியும், தற்காப்பு ஆட்டம் விளையாட முடியும். பேட்டிகில் உள்ள சில தொழில்நுட்ப சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்கு அணியில் உள்ள சீனியர் வீரர்களுடன் அவர், உரையாடி உள்ளார்.

அவரது பேட்டிங்கைப் பற்றி நாங்கள் அவருக்கு நிறைய விஷயங்களைச் சொல்ல விரும்பவில்லை, அவர் விளையாடும் விதத்திலேயே விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதே வழியில் அவர் சிறப்பாக செயல்பட்டால் மிகவும் ஆபத்தான வீரராக இருப்பார். ஷுப்மன் கில் தரமான வீரர், இது அனைவருக்கும் தெரியும். ஜெய்ஸ்வாலைப் போலவே, ஷுப்மன் கில் பேட்டிங்கிலும் பல விஷயங்களை சிக்கலாக்க விரும்பவில்லை, அவர் தனது பேட்டிங்கை நன்றாக புரிந்துகொள்கிறார்.

ஷுப்மன் கில்லுக்கு பெரிய அளவில் ரன்களை எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது தெரியும். அவர், இதற்கு முன்பு அதைச் செய்துள்ளார். நீங்கள் 30 முதல் 40 பந்துகளை எதிர்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதை ஆஸ்திரேலியாவில் செய்வது கடினமான விஷயம்.

ரிஷப் பந்த் மீதும் எந்த அழுத்தமும் இல்லை. ஆஸ்திரேலியாவில் அவர், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்தியாவில் நல்ல பார்மில் இருந்த அவர், ரன்களை குவித்தார். இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் அவரது பேட்டிங் திறனை, நாம் இங்கு அமர்ந்து கொண்டு மதிப்பிடக்கூடாது.

அவர், என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். இந்த 3 பேரிடம் இருந்தும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியும், விளையாட்டு குறித்து விழிப்புணர்வு போன்ற சிறிய விஷயங்களில் வேலை செய்யச் சொல்வதே எங்கள் வேலை. அவர்களிடம் மேலும் உரையாடி, அவர்களின் சிந்தனை மற்றும் செயல்முறையை சிக்கலாக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

இவ்வாறு ரோஹித் சர்மா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x