Published : 24 Dec 2024 07:29 PM
Last Updated : 24 Dec 2024 07:29 PM
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரில் விளையாட பாகிஸ்தான் பயணிக்கவில்லை. அதையடுத்து இந்த தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது.
மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. தலா 4 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு குரூப் சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. குரூப் ‘ஏ’-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. குரூப் ‘பி’-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் ராவல்பிண்டி, கராச்சி மற்றும் லாகூர் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் மற்ற போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடர் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான குரூப் சுற்று போட்டி பிப்ரவரி 23-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
மார்ச் 4-ம் தேதி துபாயில் முதல் அரையிறுதி போட்டியும், மார்ச் 5-ம் தேதி லாகூரில் இரண்டாவது அரையிறுதி போட்டியும் நடைபெறுகிறது. மார்ச் 9-ம் தேதி லாகூரில் இறுதிப்போட்டி. இந்தியா இறுதிக்கு தகுதி பெற்றால் அந்தப் போட்டி துபாயில் நடைபெறும். அனைத்து போட்டிகளும் பகலிரவு போட்டிகளாக நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT