Published : 24 Dec 2024 07:49 AM
Last Updated : 24 Dec 2024 07:49 AM
ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
ஜோகன்னஸ்பர்க்கில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 47 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான சைம் அயூப் 94 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசினார். இது அவருக்கு 3-வது சதமாக அமைந்தது.
பாபர் அஸம் 52, கேப்டன் முகமது ரிஸ்வான் 53, சல்மான் ஆகா 48 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்களை வீழ்த்தினார். மார்கோ யான்சன், பிஜோர்ன் ஃபோர்டூயின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். இதையடுத்து திருத்தியமைக்கப்பட்ட இலக்குடன் 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 42 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 43 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார்.
கோர்பின் போஷ் 40, ராஸி வான் டெர் டஸ்ஸன் 35, டோனி டி ஸோர்ஸி 26, மார்கோ யான்சன் 26 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சூபியான் முகீம் 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஷாகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
அந்த அணி முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஒருநாள் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டிருந்தது. முன்னதாக இரு அணிகள் இடையே நடைபெற்ற டி 20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என வென்றிருந்தது. குறுகிய வடிவிலான தொடர்களை அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் வரும் 26-ம் தேதி செஞ்சுரியன் நகரில் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT