Published : 23 Dec 2024 12:33 AM
Last Updated : 23 Dec 2024 12:33 AM

நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட் விளையாடியவர் அஸ்வின்: பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்

நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட் விளையாடியவர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில், அஸ்வினை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கும் நிலையில் இந்த கடிதம் உங்களை வந்து அடையும் என நம்புகிறேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நீங்கள் வெளியிட்ட அறிவிப்பு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுது. இன்னும் பல ஆப்-பிரேக் பந்துகளை உங்களிடமிருந்து அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், நீங்கள் ஒரு கேரம் பந்தை வீசினீர்கள். இருப்பினும், இது உங்களுக்கும் கடினமான முடிவாக இருந்திருக்கும், குறிப்பாக நீங்கள் இந்தியாவுக்காக சிறந்த ஆட்டத்தை விளையாடியவர் என்ற அடிப்படையில் உங்கள் முடிவை அனைவரும் புரிந்துகொள்வர்.

புத்திசாலித்தனம், கடின உழைப்பு மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அணியை முன்னிலைப்படுத்தி விளையாடியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நீங்கள் விடைபெற்ற நிலையில், நீங்கள் பயன்படுத்த ஜெர்சி எண் 99 உங்கள் இழப்பை உணரவைக்கும்.

அனைத்து வடிவங்களிலும் நீங்கள் எடுத்த 765 சர்வதேச விக்கெட்டுகளில் ஒவ்வொன்றும் சிறப்பானது. டெஸ்ட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றவர் என்ற சாதனையை வைத்திருப்பது என்பது, கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அணியின் வெற்றியில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் காட்டுகிறது.

ஓர் இளம் வீரராக, உங்கள் அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினீர்கள். 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்தீர்கள். 2013 சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி ஓவரில் நீங்கள் அணியை வெற்றிபெறச் செய்த போது, நீங்கள் இந்திய அணியின் முக்கிய உறுப்பினராக மாறிவிட்டீர்கள்.

இக்கட்டான தருணங்களில் கூட, உங்கள் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு முதன்மையாக இருந்தது. அது என்றென்றும் உங்களுக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். உங்கள் தாய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோதும் அணிக்கு பங்களிக்க வேண்டி நீங்கள் போட்டிக்கு திரும்பி வந்த விதம் மற்றும் சென்னையில் வெள்ளத்தின் போது உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாதபோதும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நீங்கள் விளையாடிய நேரத்தை நாங்கள் அனைவரும் நினைவில் கொள்கிறோம்.

உங்கள் உரையாடல்களில் நீங்கள் கொண்டு வரும் புத்திசாலித்தனம் மற்றும் அரவணைப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. கிரிக்கெட், விளையாட்டு மற்றும் பொதுவாக வாழ்க்கை பற்றிய 'குட்டி ஸ்டோரீஸ்'-ஐ தொடர்ந்து பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

இனி நீங்கள் மிகவும் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து பங்களிப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். மீண்டும் ஒருமுறை, உங்களது சிறந்த பங்களிப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எதிர்கால வாழ்க்கை சிறப்புற அமைய எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x