Published : 22 Dec 2024 04:28 AM
Last Updated : 22 Dec 2024 04:28 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை அணியை வீழ்த்தியது மும்பை

மும்பை: இந்தியன் சூப்பர் லீக் தொடரில் மும்பையில் உள்ள மும்பை கால்பந்து அரினாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி - சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. மும்பை அணி 4-3-3 என்ற பார்மட்டிலும், சென்னையின் எஃப்சி 3-4-1-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. 5-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் இர்பான் யத்வாத் உதவியுடன் பந்தை பெற்ற லூக்காஸ் பிரம்பில்லா, பாக்ஸின் மையத்தில் இருந்து அடித்த பந்து இடைமறிக்கப்பட்டது.

8-வது நிமிடத்தில் மும்பை அணியின் வான் நீஃப், பந்தை விரைவாக கடத்திச் சென்று பாக்ஸ் பகுதிக்குள் நுழைய முயன்றார். அப்போது அவர், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சூழ்நிலையில் சென்னையின் எஃப்சி அணியின் ரியான் எட்வர்ட்ஸ் பந்தை முழுமையாக விலக்கிவிடத் தவறினார். அவரது காலில் பட்டு விலகிச் சென்ற பந்தை பெற்ற மும்பை அணியின் நிகொலாஸ் கரேலிஸ், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்து கோல் வலையின் இடதுபுற கார்னரை துளைத்தது.

இதனால் மும்பை சிட்டி எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 19-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் கியான் நஸ்சிரி உதவியுடன் பந்தை பெற்ற லூக்காஸ் பிரம்பில்லா பாக்ஸின் வலதுபுறத்தில் இருந்து அடித்த ஷாட், கோல் கம்பத்தின் மையப்பகுதியில் மும்பை அணியின் கோல்கீப்பர் ரெஹ்னேஷ் பரம்பாவால் தடுக்கப்பட்டது.

தல் பாதியின் முடிவில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

48-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் டேனியல் சிமா சுக்வு அடித்த கிராஸை பெற்ற இர்பான் யத்வாத் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கோம்கம்பத்தின் மீது பட்டு விலகிச் சென்றது.

84-வது நிமிடத்தில் மும்பை அணியின் பிரண்டன் பெர்னாண்டஸ் கார்னரில் இருந்து அடித்த பந்தை பெற்ற மெக்தாப் சிங் 6 அடி தூரத்தில் இருந்தபடி தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்று ஏமாற்றம் அளித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 என முன்னிலை வகித்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் சென்னையின் எஃப்சி அணி கடைசி வரை போராடிய போதிலும் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது.

12 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை சிட்டி எஃப்சி 5 வெற்றி, 5 டிரா, 2 தோல்விகளுடன் 20 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியது. சென்னையின் எஃப்சி அணிக்கு இது 6-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 டிரா, 6 தோல்விகளுடன் 15 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தில் தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x