Published : 21 Dec 2024 01:10 AM
Last Updated : 21 Dec 2024 01:10 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றது பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது.

கேப்டவுனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 329 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 82 பந்துகளில், 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 80 ரன்களும், பாபர் அஸம் 95 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 73 ரன்களும் சேர்த்தனர். 3-வது விக்கெட்டுக்கு பாபர் அஸம், முகமது ரிஸ்வான் ஜோடி 142 பந்துகளில் 115 ரன்கள் சேர்த்தது. இறுதிக்கட்டத்தில் கம்ரன் குலாம் 32 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசினார். அவரது அதிரடியால் கடைசி 17 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 161 ரன்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் க்வெனா மபகா 4, மார்கோ யான்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினர். 330 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 43.1 ஓவரில் 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசன் 74 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசினார். டோனி டி ஸோர்ஸி 34, டேவிட் மில்லர் 29, ராஸி வான் டெர் டஸ்ஸன் 23, எய்டன் மார்க்ரம் 21, கேப்டன் தெம்பா பவுமா 12 ரன்களில் நடையை கட்டினர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகீன் ஷா அப்ரிடி 4, நசீம் ஷா 3, அப்ரார் அகமது 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (22-ம் தேதி) ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x