Published : 21 Dec 2024 01:06 AM
Last Updated : 21 Dec 2024 01:06 AM
இந்தியாவுக்கு எதிரான ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி 2 போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வீரரான நேதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து பிரிஸ்பனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் டிராவில் முடிவடைந்தது.
4-வது டெஸ்ட் வரும் 26-ம் தேதி மெல்பர்ன் நகரிலும், கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ம் தேதி சிட்னியிலும் நடைபெற உள்ளன. இந்த இரு ஆட்டங்களுக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் முதல் 3 போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிங்கிய நேதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு 19 வயதான இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி 19 வயதை எட்டிய கான்ஸ்டாஸ், பாக்ஸிங் டே டெஸ்டில் விளையாடும் லெவனில் இடம் பெற்றால், 70 வருடங்களில் ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இளம் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். கடைசியாக கடந்த 1953-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இயன் கிரெய்க் 17 வயது 239 நாட்களில் விளையாடி இருந்தார்.
நீக்கப்பட்டுள்ள 25 வயதான மெக்ஸ்வீனி, இந்திய அணிக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிகளிலும் முறையே 10, 0, 39, 10*, 9, 4 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு முறை கூட அரை சதத்தை எடட்டவில்லை. 4 முறை ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் ஆட்டமிழந்து இருந்தார். மெக்ஸ்வீனிக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள சாம் கான்ஸ்டாஸ், சமீபத்தில் உள்நாட்டு தொடரான ஷெப்பீல்டு ஷீல்டில் இரட்டை சதம் விளாசி தேர்வுக்கு குழுவின் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனால் அவர், அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
மேலும் இந்தியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 73 ரன்கள் விளாசியிருந்தார். தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற பகலிவு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்காக களமிறங்கிய 107 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். காயம் காரணமாக விலகியுள்ள வேகப் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஜெ ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சீன் அபாட் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
அணி விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சாம் கான்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், நேதன் லயன், ஜெ ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர் சீன் அபாட், ஸ்காட் போலண்ட், .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT