Published : 19 Dec 2024 08:08 AM
Last Updated : 19 Dec 2024 08:08 AM

ரவிச்சந்திரன் அஸ்வின்: 14 வருட ‘சிம்மசொப்பனம்’

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான அஸ்வின், 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையுடன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்த வகையில் அனில் கும்ப்ளே (619 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் அஸ்வின் அங்கும் வகித்து இருந்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிளப் போட்டி, ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தவுடன் ரோஹித் சர்மாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது அஸ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,“இந்திய கிரிக்கெட் வீரராக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் இன்று (நேற்று) எனக்கு கடைசி நாள். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன்” என்றார்.

அறிவிப்பை வெளியிட்டு சிறிது நேரம் பேசிய பின்னர் எந்தவித கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அஸ்வின் மட்டும் வெளியேறினார். ஆஸ்திரேலியாவில் இருந்து அஸ்வின் இன்று தாயகம் திரும்ப உள்ளார். ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்னர் அஸ்வின், விராட் கோலியுடன் நீண்ட நேரம் ஓய்வு அறையில் உணர்ச்சிகரமாக உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அஸ்வினின் தோளில், விராட் கோலி தனது கையை வைத்திருந்தார், அஸ்வின் சிரிப்பதற்கு முன்பு கண்களைத் துடைப்பதைக் காண முடிந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் களமிறக்கப்படவில்லை. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பந்து வீச்சில் அஸ்வின் 53 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார்.

ஏற்கெனவே நியூஸிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அஸ்வினின் பந்துவீச்சு முதன் முறையாக எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது சில விமர்சனங்களுக்கு வழிவகுத்திருந்தது. தற்போதைய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விளையாடும் லெவனில் அவரது இடம் நிலையில்லாமல் இருந்தது. இதனால் அணியில் தனது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நிலைக்கு அஸ்வின் வந்திருக்கக்கூடும் எனவும், இதன் அடிப்படையிலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக உடனடியாக ஓய்வு முடிவை அவர், எடுத்திருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையைச் சேர்ந்த அஸ்வின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 116 போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்களையும், சர்வதேச டி 20-ல் 65 ஆட்டங்களில் விளையாடி 72 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். 2010-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், அதற்கு அடுத்த வருடம் டெஸ்ட் போட்டியிலும் (மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக) அறிமுகமாகி இருந்தார் அஸ்வின். தற்போது அவருடைய 14 வருட கிரிக்கெட் வாழக்கை முடிவுக்கு வந்துள்ளது.

அஸ்வின் ஓய்வு ஏன்? - ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “அஸ்வினின் மனதில் ஓய்வு குறித்த எண்ணம் இருந்தது, அதன் பின்னால் நிறைய விஷயங்கள் உள்ளன. அவரால் அதற்கு பதிலளிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் அணி என்ன நினைக்கிறது என்பதை அவர், புரிந்துகொண்டுள்ளார். நான், பெர்த் நகருக்கு வந்து சேர்ந்ததும் இதுகுறித்து நாங்கள் உரையாடினோம்.

அப்போது பகலிரவு டெஸ்ட் போட்டி வரை அணியில் இருக்குமாறு அஸ்வினை, நான் சமாதானப்படுத்தினேன். அதன் பின்னரே இது நடந்துள்ளது. இந்தத் தொடரில் நான் இப்போது தேவையில்லை என்றால், நான் விளையாட்டிலிருந்து விடைபெறுவது நல்லது என்று அவர் உணர்ந்தார். அதனாலேயே அவர், விளையாட்டில் இருந்து விடை பெற்றுள்ளார். அஸ்வின்எங்களுக்கு உண்மையிலேயே பெரிய மேட்ச் வின்னர். அவரது முடிவை மதிக்க வேண்டும்” என்றார்.

‘சிறிது ஆற்றல் இருக்கிறது‘ - ஓய்வு முடிவை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது: ஒரு கிரிக்கெட் வீரராக எனக்குள் கொஞ்சம் ஆற்றல் இருப்பதாக உணர்கிறேன். அதை கிளப் அளவிலான கிரிக்கெட்டில் அதை வெளிப்படுத்த விரும்புகிறேன். நான் மிகவும் வேடிக்கையாக இருந்தேன். ரோஹித் மற்றும் எனது அணி வீரர்கள் பலருடன் இணைந்து நான் நிறைய நினைவுகளை உருவாக்கி உள்ளேன்.

கடந்த சில ஆண்டுகளாக அணியில் சிலரை இழந்துள்ளேன். ஓய்வு அறையில் எஞ்சியிருக்கும் பழைய வீரர்களின் கடைசி கூட்டம் நாங்கள். இந்த நேரத்தில் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். பிசிசிஐ மற்றும் சக அணி வீரர்களுக்கு நன்றி சொல்லாவிட்டால் எனது கடமைகளில் இருந்து தவறிவிடுவதாக அமைந்துவிடும். அவர்களில் சிலரை குறிப்பிட விரும்புகிறேன்.

மிக முக்கியமாக ரோஹித் சர்மா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் செய்த நூற்றுக்கணக்கான கேட்ச்கள் பல ஆண்டுகளாக நான் விக்கெட்களை வீழ்த்த உதவியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எதிராக விளையாடுவதை நான் ரசித்தேன். பல ஆண்டுகளாக ஆதரவளித்த ஊடகங்களுக்கும் நன்றி.

இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். இந்த தருணத்தில் உங்களை கேள்விகள் கேட்க அனுமதிக்காததற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்னைப் பற்றி நல்ல விஷயங்களையும், சில மோசமான விஷயங்களையும் சில சந்தர்ப்பங்களில் எழுதியதற்கு நன்றி. இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.

‘தோனி பாணியில்’: 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரின் பாதியிலேயே அப்போது கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். அதேபோன்று தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் தொடரின் பாதியிலேயே ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.

‘சிம்மசொப்பனம்’: டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 250 விக்கெட்கள், 300 விக்கெட்கள், 350 விக்கெட்கள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பல்வேறு சாதனைகளுக்கு உரிமையாளராக விடைபெற்றுள்ளார் அஸ்வின். 537 விக்கெட்களை வேட்டையாடி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 7-வது இடத்துடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 முறை 5 விக்கெட்களை சாய்த்துள்ளார் அஸ்வின். இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்துள்ளார். 268 முறை அவரது, பந்து வீச்சில் இடதுகை பேட்ஸ்மேன்கள் வீழ்ந்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்வரிசை பேட்டிங்கில் கைகொடுத்துள்ள அஸ்வின் 6 சதங்கள், 14 அரை சதங்களுடன் 3,503 ரன்களையும் வேட்டையாடி உள்ளார்.

உலக அரங்கில் 500 விக்கெட்கள் மற்றும் பேட்டிங்கில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை சேர்த்த 3 வீரர்களில் அஸ்வினும் ஒருவர். 11 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இதில் அனைத்து தொடர்களையும் இந்திய அணி வென்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x