Published : 17 Dec 2024 04:19 PM
Last Updated : 17 Dec 2024 04:19 PM

ஆசியாவுக்கு வெளியே சொதப்பும் ஷுப்மன் கில் - 16 போட்டிகளில் 40 ரன்களை கூட எட்டாத சோகம்!

ஷுப்மன் கில்.

பிரிஸ்பன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் ஆசியாவுக்கு வெளியே கடுமையாக சொதப்பி வருகிறார்.

ஒன் டவுன் அல்லது 3-ம் நிலையில் இறங்கும் பேட்டர் ஒரு முக்கியமான இணைவுப் புள்ளியாவார். ஒரு அணி 200 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து வரும் பேட்டர் அவுட்டானால், பெரிய சரிவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதே போல் 0/1 என்று இருந்தாலும் ஒன் டவுன் பேட்டர் பொறுப்புடன் இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். ஆகவே மிகவும் மையமான ஒரு டவுன் ஆகும் அது. அதில் இறக்கப்படும் ஷுப்மன் கில் 16 இன்னிங்ஸ்களாக ஆசியாவுக்கு வெளியே 40 ரன்களை எடுக்கவில்லை என்பது மிகவும் கவலையளிக்கும் விஷயம்.

நடப்பு ஆஸ்திரேலிய தொடரிலும் நன்றாகத் தொடங்கி தன் விக்கெட்டைத் தூக்கி எறிகிறார். பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அத்தகைய ஷாட் உண்மையில் அராஜகமான ஷாட்டே. அவரும் கோலி, ரோஹித் சர்மா பொறுப்பில்லாமல் ஆடுவதுடன் இளம் வீரர் ஜெய்ஸ்வாலையும் தவறாக வழிநடத்துகின்றனர்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் போராடி ராகுல், ஜடேஜா, நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோரால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டு மேட்சை டிரா செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாளை (டிச.18) பாட் கமின்ஸ் 300 ரன்களை 60-70 ஓவர்களில் இலக்காகக் கொடுத்து அடியுங்கள் என்று நம்மை சவாலுக்கு அழைப்பார். ஆனால் டிராவுக்கு ஆடி போட்டியை டிரா செய்வதில் கவனம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு கோலி, கில், ரோஹித்தின் ஆட்டம் முக்கியம்.

இந்நிலையில் ஷுப்மன் கில்லின் ஆசியாவுக்கு வெளியேயான இந்த கடைசி 16 இன்னிங்ஸ் சொதப்பல் குறித்து ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனலில் கூறும்போது, “ஷுப்மன் கில் பற்றி நாம் பேசியாக வேண்டும். ஆசியாவுக்கு வெளியே ஷுப்மன் கில் 40 ரன்களை எட்டாமல் 16 இன்னிங்ஸ்களை கடந்து வந்துள்ளார்.

ஒற்றை இலக்கத்தில் வெளியேறுகிறார், இல்லையெனில் 10-20 ரன்களில் காலியாகி விடுகிறார். நம்பர் 3 வீரராக இருந்து கொண்டு இப்படி ஆசியாவுக்கு வெளியே சொதப்பி வந்தால் டீம் இந்தியாவுக்கு அது பெரும் பிரச்சினைகளைக் கொடுக்கும். இதுவும் விவாதிக்கப்படும். கடந்த போட்டியில் நன்றாக ஆடினார். ஆனால் விக்கெட்டைத் தூக்கி எறிகிறார்.

இது ஷுப்மன் கில் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியின் விளையாடும் பாணி குறித்ததாகும். 2வது பந்தையே யஷஸ்வி ஜெய்ஸ்வால் நேராக பீல்டர் கையில் கொடுத்து விட்டுச் செல்கிறார். ஆனால் முதல் பந்தும் கல்லி ஃபீல்டர் கைக்குச் சென்றிருக்க வேண்டிய கேட்ச் போல்தான் சென்றது. கில் இறங்குகிறார் உடனேயே பெரிய ட்ரைவை ஆடுகிறார். அது ஒழுங்காக ஆடப்பட்டதால் சிக்கலில்லை. ஆனால் ஆஸ்திரேலிய பிட்ச்களில் அவை ஸ்லிப் திசையில் கேட்சாகத்தான் முடியும். கைபோன பாதையில் பேட் போகலாமா? அத்தகைய வசீகரத்தை உங்களால் நிறுத்த முடியவில்லையே.

பந்து உள்ளே வரும் இன்ஸ்விங்கராக இருந்தாலும் சரி, பந்து வெளியே செல்லும் அவுட் ஸ்விங்கராக இருந்தாலும் வெள்ளைப்பந்தில் ஆடுவது போல் ஆடுகின்றனர். வெள்ளைப்பந்தின் நோய்க்கூறு சிகப்புப் பந்திலும் பீடித்து விட்டது. ரோஹித் சர்மா, விராட் கோலி காலம் முடிந்து விட்டது. ஆனால் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் இனிதான் இந்திய அணியின் சுமையை ஏற்று நடத்த வேண்டும். எனவே இவர்கள் தவறாக ஆட முடிவெடுக்கக் கூடாது.” என்றார் ஆகாஷ் சோப்ரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x