Published : 17 Dec 2024 12:34 AM
Last Updated : 17 Dec 2024 12:34 AM

NZ vs ENG: இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் இலக்கு

ஹாமில்டன்: நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 347 ரன்களும், இங்கிலாந்து 143 ரன்களும் எடுத்தன. 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 101.4 ஓவர்களில் 453 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 204 பந்துகளில், ஒரு சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் 156 ரன்கள் விளாசினார். பென் ஸ்டோக்ஸ், ஷோயிப் பஷிர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதையடுத்து 658 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 5 ரன்களில் மேட் ஹென்றி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பென் டக்கெட் 4 ரன்களில் டிம் சவுதி பந்தில் போல்டானார். ஜேக்கப் பெத்தேல் 9, ஜோ ரூட் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 640 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி.

டி 20-ல் மே.இ.தீவுகள் தோல்வி

கிங்ஸ்டவுன்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. கிங்ஸ்டவுனில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுமியா சர்க்கார் 43 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து 148 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 19.5 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பவல் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாசினார். ரோமாரியோ ஷெப்பர்டு 22, ஜான்சன் சார்லஸ் 20 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி சார்பில் மகேதி ஹசன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

மேற்கு இந்தியத் தீவுகளின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவையாக இருந்தன. இந்த ஓவரை ஹசன் மஹ்மூத் சிறப்பாக வீசி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றி மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் இருந்து வெற்றியை பறித்தார். 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை (18-ம் தேதி) நடைபெறுகிறது.

ஒடிசா பாட்மிண்டனில் ரித்விக் சாம்பியன்

சென்னை: ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஒடிசாவில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீரரான ரித்விக் சஞ்சீவி, சகநாட்டைச் சேர்ந்த தருண் மனேப்பள்ளியை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் ரித்விக் சஞ்சீவி 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்சீவி ஹட்சன் பாட்மிண்டன் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x