Published : 16 Dec 2024 03:23 PM
Last Updated : 16 Dec 2024 03:23 PM
பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 51 ரன்களைச் சேர்த்துள்ளது. மழை குறுக்கிட்டதால் முன்கூட்டிய மூன்றாவது நாள் ஆட்டம் முடித்து வைக்கப்பட்டது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பனிலுள்ள காபா மைதானத்தில் டிச.14-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து எஞ்சியுள்ள 4 நாட்களிலும் கூடுதலாக அரை மணி நேரம் ஆட்டம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று (டிச.15) நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 445 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் குவித்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்தில் பவுண்டரி விளாசி அடுத்த பந்தில் விக்கெட்டானார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில் 1 ரன்னில் கிளம்பினார். விராட் கோலி 3 ரன்களில் பெவிலியன் திரும்பியது ஏமாற்றம்.
அடுத்து வந்த ரிஷப் பந்து 9 ரன்களில் விக்கெட்டாக 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 51 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் 394 ரன்கள் பின்தங்கியுள்ளது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முன்கூட்டியே முடித்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கே.எல்.ராகுல் 33 ரன்களுடனும், ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT