Published : 16 Dec 2024 12:18 PM
Last Updated : 16 Dec 2024 12:18 PM
சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குகேஷுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று (டிச.16) சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா குகேஷுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள், குகேஷ் படித்த தனியார் பள்ளியின் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் குகேஷுக்கு மலர்களைத்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், “உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறினார்.
ஏற்கெனவே, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் தலைமையில் கலைவாணர் அரங்கில் குகேஷுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இன்று குகேஷ் படித்த தனியார் பள்ளியில் நடைபெறும் பாராட்டு விழாவில் குகேஷ் கலந்து கொள்கிறார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதினார். 14 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில், 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.
இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று தொடர்ச்சியான டிராக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் 6 புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தார். 12-வது சுற்றில் டிங் லிரேன் வெற்றி பெற்றார். இதன் மூலம் இருவரும் 6-6 என்ற சமநிலையை எட்டினர். 13-வது சுற்று புதன்கிழமை (டிச.11) நடைபெற்றது. அதில் இருவரும் 6.5 - 6.5 புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் டிரா ஆனது
இந்நிலையில் வெற்றியை நிர்ணயிக்கும் 14-வது சுற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் குகேஷ் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இருவரும் ஈடு கொடுத்து விளையாடி வந்தனர். நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட போட்டியில் குகேஷ் தனது 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT