Published : 14 Dec 2024 05:45 AM
Last Updated : 14 Dec 2024 05:45 AM
புதுடெல்லி: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ். இதன் மூலம் இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ். இந்நிலையில் அவருக்கு, உலகின் முதல் நிலை வீரரரும் உலக சாம்பியன்ஷிப்பில் 5 முறை பட்டம் வென்றவருமான நார்வே நாட்டைச் சேர்ந்த பிரபல வீரரான மேக்னஸ் கார்ல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேக்னஸ் கார்ல்சன் கூறியதாவது: குகேஷுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனை, முதலில் அவர் சென்னையில் நடைபெற்ற ஃபிடே சர்க்யூட் போட்டியில் தேவைக்கு தகுந்தபடி வெற்றி பெற்றார். அதன் பின்னர், கேண்டிடேட்ஸ் போட்டியில் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தினார்.
உலக சாம்பியன்ஷிப்பில் குகேஷ் தான் வெற்றி பெறுவார் என எங்களில் பலர் நினைத்தோம். ஆனால் பல சுற்றுகள் டிராவில் முடிவடைந்தன. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இறுதி சுற்றில் தனது பொசிஷனை உயிர்ப்பிப்புடன் வைத்திருப்பதற்கான சிறந்த வேலையை குகேஷ் செய்து கொண்டிருந்தார். திடீரென்று எல்லாம் முடிந்துவிட்டது.
2 ஆண்டுகள் இந்த பட்டத்தை அவர், வைத்திருப்பார். உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது அவருக்கு ஊக்கமளிக்கும். இனிமேல் அவர், வரும் போட்டிகளில் சிறந்த முடிவுகளை பெறுவார். இப்போது அவர், உலகின் நம்பர் 2 வீரராக மாறக்கூடும். எதிர்காலத்தில் முதல் நிலை வீரராகலாம். இது முடிந்து விடவில்லை. இன்னும் பல வெற்றிகள் வந்து சேரும். இவ்வாறு மேக்னஸ் கார்ல்சன் கூறினார்.
குகேஷுடன் பட்டத்துக்கு மோதலா? - உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது குகேஷ் கூறும்போது, “உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுவிட்டதால் நான் சிறந்த வீரராக முடியாது. அது மேக்னஸ் கார்ல்சென் மட்டுமே.
அவர் அடைந்திருக்கும் உயரத்தை நான் அடைய வேண்டும். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் அவருடன் விளையாடியிருந்தால் மிகவும் அற்புதமானதாகவும், கடும் சவால் நிறைந்ததாகவும் இருந்திருக்கும். உலகின் சிறந்த வீரருக்கு எதிராக என்னை நானே சோதித்துப் பார்க்க விரும்புகிறேன்” என்றார்.
இதுகுறித்து மேக்னஸ் கார்ல்சன் கூறும்போது, “நான் இனிமேல் அந்த சர்க்கஸின் ஒரு பகுதியாக இருக்கப்போவது இல்லை” என்றார். 5 முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் கடந்த 2023-ம் ஆண்டு தனது பட்டத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக விளையாட போவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார். தற்போதும் அந்த முடிவில் அவர், உறுதியுடன் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT