Published : 14 Dec 2024 05:30 AM
Last Updated : 14 Dec 2024 05:30 AM

ஆஸி.க்கு எதிராக 3-வது டெஸ்டில் மோதல்: முதல் இன்னிங்ஸ் தடுமாற்றத்தில் இருந்து மீளுமா இந்தியா?

ஜெய்ஸ்வால்- ஷுப்மன் கில்

பிரிஸ்பன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இன்று காலை 5.50 மணிக்கு தொடங்கியது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் 3-வது டெஸ்ட் போட்டியில் இன்று பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் மோதுகின்றன.

நியூஸிலாந்துக்கு எதிரான உள்நாட்டு தொடரில் 3 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்ததே தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தன. இது ஆஸ்திரேலியாவிலும் தொடர் கதையாக உள்ளது. வெற்றி பெற்ற பெர்த் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், 2-வது இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன் வேட்டையாடி வெற்றியை வசப்படுத்தியது. ஆனால் அடுத்து நடைபெற்ற அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மீண்டும் தள்ளாடிய இந்திய அணி, 2-வது இன்னிங்ஸில் எழுச்சி காண தவறி தோல்வியை சந்தித்தது.

3-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் காபா மைதானம் முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. இங்கு இதுவரை கைப்பற்றப்பட்ட விக்கெட்டுகளில் 85 சதவீதம் வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியவைதான். இதனால் மீண்டும் ஒரு முறை இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களும் பிரதான பங்கு வகிப்பார்கள்.

இந்திய அணியின் பேட்டிங் நிலைத்தன்மை இல்லாமல் இருப்பது பலவீனமாக உள்ளது. கே.எல்.ராகுல் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார். ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் மேற்கொள்வதில் கே.எல்.ராகுல் தேக்கம் அடைவது, அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிவகுப்பதாக உள்ளது.

அநேகமாக பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். இது நிகழ்ந்தால் கே.எல்.ராகுல் 5 அல்லது 6-வது வீரராக களமிறங்குவார். ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கும் பட்சத்தில் அவர், தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 9 ரன்களே சேர்த்தார். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, எஞ்சிய ஆட்டங்களில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்துவதில் கூடுதல் முனைப்பு காட்டக்கூடும்.

அதேவேளையில் மற்றொரு நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியிடம் இருந்தும் அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் சிறந்த திறன் வெளிப்படவில்லை. பெர்த் போட்டியில் சதம் விளாசிய அவர், அடிலெய்டு போட்டியில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 20 ரன்களை கூட எடுக்கவில்லை. இதனால் பிரிஸ்பன்

போட்டிக்கான வலை பயிற்சியில் விராட் கோலி அதிக நேரம் செலவிட்டுள்ளார். எனவே பிரிஸ்பன் போட்டியில் அவரிடம், இருந்து சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுவரிசையில் கடந்த தொடர்களில் அதிரடியாக விளையாடி வெற்றி தேடிக்கொடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இம்முறை 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தவறினார்.

அவருடன், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் மற்றும் ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோரும் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி சிறந்த பங்களிப்பை வழங்கினால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க வாய்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் சிறிய மாற்றங்கள் இருக்கக்கூடும்.

ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக ஆகாஷ்தீப் சிங்கும், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவீந்திர ஜடேஜா களமிறங்க வாய்ப்பு உள்ளது. இரு போட்டிகளிலும் சேர்த்து 12 விக்கெட்கள் வேட்டையாடி உள்ள ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளார்.

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமநிலையை அடையச் செய்த உற்சாகத்துடன் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது ஆஸ்திரேலிய அணி. வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அணிக்கு திரும்பி உள்ளார். இதனால் விளையாடும் லெவனில் ஸ்காட் போலந்து நீக்கப்பட்டு ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்படுவதை கேப்டன் பாட் கம்மின்ஸ் நேற்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது உறுதிப்படுத்தினார்.

டிராவிஸ் ஹெட்: ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் டிராவிஸ் ஹெட்டை பிரதானமாக நம்பி உள்ளது. உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சிறந்த பார்மில் இல்லை. 2 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ள தொடக்க வீரரான நேதன் மெக்ஸ்வீனி, அடிலெய்டு போட்டியில் சற்று கவனம் ஈர்த்தார். மார்னஸ் லபுஷேன் அரை சதம் அடித்து பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். டிராவிஸ் ஹெட் தாக்குதல் ஆட்டம் தொடுத்து ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறார். அவர், மீண்டும் ஒருமுறை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளிக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x