Published : 14 Dec 2024 03:25 AM
Last Updated : 14 Dec 2024 03:25 AM
சிங்கப்பூர்/ சென்னை: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில், உலக சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷுக்கு தங்கப் பதக்கம், டிராபியுடன் ரூ.11 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அவரை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் லிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயது குகேஷ். இதன்மூலம் இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார்.
விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நிறைவு விழா சிங்கப்பூரில் நேற்று மாலை நடந்தது. இதில், இளம் உலக சாம்பியனான குகேஷுக்கு, தங்கப் பதக்கத்தையும், டிராபியையும் சர்வதேச செஸ் சங்கத்தின் (ஃபிடே) தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் வழங்கினார். ரூ.11 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.
‘கடவுள் வழிகாட்டினார்’ - விழாவில் குகேஷ் பேசும்போது, “நான் ஒரு மில்லியன் முறை வாழ்ந்ததுபோல இத்தருணத்தை உணர்கிறேன். இந்த கோப்பையை ஏந்தியிருப்பதை, என் வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமானதாக கருதுகிறேன். பல கனவுகளோடு, பல சவால்களும் இந்த பயணத்தில் இருந்தன. என்னுடன் இருந்தவர்களால் அது அழகாகவே அமைந்தது. நான் தீர்வுகாண முடியாமல் தவித்து நின்ற நேரத்தில், கடவுள்தான் என்னை அழைத்துச் சென்று வழிகாட்டியுள்ளார்” என்று தெரிவித்தார்.
சாம்பியன் டிராபியை பெற்ற பிறகு, மேடையில் இருந்து இறங்கி வந்த குகேஷ், அதை தனது தந்தை ரஜினிகாந்திடம் வழங்கினார். அவர், அதை குகேஷின் அம்மா பத்மகுமாரியிடம் கொடுத்தார். அதை கைகளில் வாங்கிய அவர், நெகிழ்ச்சியுடன் முத்தமிட்டார். விழாவில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குகேஷை சூழ்ந்தனர். மகிழ்ச்சியுடன் அவர்கள் அனைவருக்கும் ஆட்டோகிராப் போட்டுத் தந்தார்.
முன்னதாக ஃபிடே சார்பில் காலையில் நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டின்போது, டிராபியை வியந்து பார்த்த குகேஷ், “நிறைவு விழாவிலேயே டிராபியை பெற்றுக் கொள்கிறேன். இப்போது தொட்டுப் பார்க்க விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.
தமிழக அரசு அறிவிப்பு: மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த குகேஷை, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்தி பதிவிட்டிருந்தார். அத்துடன் தொலைபேசி வாயிலாகவும் அவரை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்குமாறு முதல்வருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதையேற்று, குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
‘சதுரங்கத்தில் புதிய சகாப்தம்’ - உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள குகேஷ், சென்னை அடுத்த மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் ஆவார். அவரது வெற்றி குறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தனது செஸ் பயணத்தை சிறுவயதிலேயே தொடங்கியவர் குகேஷ். அவரது திறமையை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்ட பள்ளி, அவரது திறமைகளை வளர்த்துக் கொள்ள முழு ஆதரவு வழங்கியது. கடும் பயிற்சி மற்றும் விளையாட்டின் மீதான ஆர்வத்தால் 12 வயதிலேயே கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றார், தற்போது இந்திய சதுரங்கத்தில் ஒரு புதிய சகாப்தம் படைத்துள்ளார். இளம் திறமையாளர்களை வளர்க்கும் வேலம்மாள் போன்ற நிறுவனங்களின் அர்ப்பணிப்பு, ஆதரவுக்கு இது ஒரு சான்று’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT