Published : 11 Dec 2024 10:05 AM
Last Updated : 11 Dec 2024 10:05 AM

இந்தியா - ஆஸ்திரேலியா பாக்ஸிங் டே டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

மெல்பர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் வரும் 14-ம் தேதி பிரிஸ்பன் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் 26-ம் தேதி தொடங்குகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ள இந்த ஆட்டத்துக்கான முதல் நாள் டிக்கெட் விற்று தீர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் வலைதள பதிவில், "பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் நாளுக்கான அனைத்து பொது டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு தங்கள் இடங்களைப் பெறுவதற்கான குறைந்த எண்ணிக்கையிலான பொது டிக்கெட்டுகள் டிசம்பர் 24-ம் தேதி வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியை காண்பதற்கு ஒட்டுமொத்தமாக 3 நாட்களில் 1.35 லட்சம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இது சாதனையாக இருந்தது. இதற்கு முன்னர் 2014-15-ம் ஆண்டு 5 நாட்கள் முழுமையாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியை 1.13 லட்சம் பேர் பார்வையிட்டு இருந்ததே சாதனையாக இருந்தது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள மெல்பர்ன் மைதானத்தில் 95 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். இதுதவிர 5 ஆயிரம் பேர் நின்று கொண்டும் போட்டியை காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x