Published : 11 Dec 2024 09:48 AM
Last Updated : 11 Dec 2024 09:48 AM
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றார். 2-வது சுற்று டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற அடுத்த 7 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன.
இதையடுத்து நடைபெற்ற 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தார். ஆனால் 12-வது சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார். இதனால் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். நேற்று ஓய்வு நாள் வழங்கப்பட்டிருந்தது. ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் 13-வது சுற்றில் டிங் லிரென் - குகேஷ் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
முக்கியமான கட்டமான 11-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்த நிலையில் அடுத்த சுற்றில் தனக்கான வாய்ப்பை தவறவிட்டார். 12-வது சுற்றில் அடைந்த தோல்வி அவருக்கு சிறிது பின்னடைவை கொடுத்துள்ளது. இன்றைய சுற்று உட்பட மொத்தம் இரு சுற்றுகள் மட்டுமே எஞ்சியுள்ளது. குகேஷ் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும், டிங் லிரென் சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கும் தலா 1.5 புள்ளிகளே தேவையாக உள்ளது.
இதனால் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலில் நடைபெற்ற 10 சுற்றுகளிலும் இருவருமே தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளவில்லை. பாதுகாப்பான வகையில் விளையாடி 8 சுற்றுகளை டிராவில் முடித்திருந்தனர். இதில் சில சுற்றுகளில் குகேஷ் ஆதிக்கம் செலுத்திய போதிலும் அதை வெற்றியாக மாற்றத் தவறியிருந்தார். இதனால் அவர், மீது சில விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் குகேஷ், எஞ்சிய 2 சுற்றுகளிலும் ஆக்ரோஷ பாணியை கடைபிடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘குகேஷிடம் ஆக்ரோஷம் இல்லை’: உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன் கூறும்போது, “இது இரண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர்களுக்கு இடையிலான விளையாட்டாகத் தெரியவில்லை. இது ஒரு திறந்த போட்டியின் இரண்டாவது சுற்று அல்லது மூன்றாவது சுற்று போல் தெரிகிறது. குகேஷ் தனது விளையாட்டு பாணியில் ஆக்ரோஷமாக இல்லை. 12-வது சுற்றில் டிங் லிலென் கவுண்டர்பஞ்ச் செய்ய அனுமதித்தார். மேலும் பல்வேறு சுற்றுகளில் சமன் செய்ய அனுமதித்தார். டிங் லிரென், பொசிஷனல் புரிதலின் அடிப்படையில்தான் முழு ஆட்டத்தையும் விளையாட முடிந்தது, அதில், அவர் மிகவும் சிறந்தவர். நீங்கள், உங்கள் எதிரிக்கு கடினமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தவறுகள் நடக்கும். குகேஷ் 12-வது சுற்றில் விளையாடியது போல் விளையாடினால், எதிராளி வெற்றி பெறுவது மிகவும் எளிதானது” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment