Published : 09 Dec 2024 04:42 PM
Last Updated : 09 Dec 2024 04:42 PM

“எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறேன்!” - நடராஜன்

தருமபுரி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் விளையாடுவேன் என தருமபுரியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார். தருமபுரியில் நடந்த விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கிளை திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் கிரிக்கெட் வீரர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதிகப்படியாக கிராமப்புறங்களில் இருந்து வீராங்கனைகள் வருகிறார்கள். நவீன கிரிக்கெட்டில் மகளிரும் நன்றாக விளையாடி வருகிறார்கள். நாளுக்கு நாள் மகளிர் அணியின் விளையாட்டுத் தரம் மேம்பட்டு வருகிறது.ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் 7 ஆண்டுகள் இருந்தேன். தற்போது டெல்லி அணிக்கு விளையாட உள்ளேன். இதில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்வேன். அதேபோல் மிட்சல் ஸ்டார்க் இருக்கிறார். இடது கை பந்துவீச்சாளர், நானும் இடது கை பந்துவீச்சாளர் அவருடன் தொடக்க ஓவர் வீசும் வாய்ப்பு இருக்கிறது. அவரிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொள்ள ஆவலோடு இருக்கிறேன். இன்றைய இளைஞர்களுக்கு எதன் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ, அதில் இறங்கி போராட வேண்டும். நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். நான் இன்னமும் கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். எடுத்த உடனேயே ஐபிஎல் விளையாட வேண்டும் என நினைக்கிறார்கள். எதுவுமே கஷ்டப்படாமல் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க் கிறார்கள். கஷ்டப்படாமல் கிடைத்தால் அதற்கான முக்கியத்துவம் தெரியாது.

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் டிஎன்பிஎல் என்ற ஒரு பிளாட்பார்ம் அமைத்ததால், ஐபிஎல் போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிகமாக விளையாடுகிற வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் இருந்து நிறைய வீரர்கள் இதுபோன்று விளையாட வருவார்கள். இது அதிக மகிழ்ச்சியைத் தருகிறது.

டெல்லி அணியில் விளையாடுவதற்கு ஆவலோடு இருக்கிறேன். ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவுக்கு விளையாடுவதற்காக தயாராகி வருகிறேன், என்றார். நிகழ்ச்சியின் போது, நடராஜனிடம் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்தும், ஆட்டோ கிராப் வாங்கியும் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x