Published : 09 Dec 2024 12:35 PM
Last Updated : 09 Dec 2024 12:35 PM

ருதர்போர்டின் சிக்சர் மழை: வங்கதேசத்தை நொறுக்கிய மே.இ.தீவுகள்!

வெஸ்ட் இண்டீஸுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் மீண்டெழுந்து 2வது டெஸ்ட்டை வென்று தொடரை 1-1 என்று டிரா செய்த நிலையில் நேற்று பாசேடெரியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது.

மே.இ.தீவுகளின் ஷெர்பானே ருதர்போர்ட் பவுண்டரி, சிக்சர் மழையில் மே.இ.தீவுகள் 295 ரன்கள் வெற்றி இலக்கை 47.4 ஓவர்களில் விரட்டி 1-0 என்று முன்னிலை பெற்றது. இதனையடுத்து வங்கதேசத்துக்கு எதிராக 11 ஒருநாள் போட்டிகளில் வரிசையாகத் தோற்றதை முடிவுக்குக் கொண்டு வந்தது மே.இ.தீவுகள்.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சவுமிய சர்க்கார் (19), தன்ஜித் ஹசன் (60) மூலம் நல்ல அதிரடி தொடக்கம் கண்டது. சவுமியா சர்க்கர் 5வது ஓவரில் அல்ஜாரி ஜோசப்பை அடுத்தடுத்து பவுண்டரி அடித்து அதே ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். லிட்டன் தாசும் 2 ரன்களில் ரொமாரியோ ஷெப்பர்டிடம் வெளியேறினார்.

தன்ஜித் ஹசன் பிரமாதமான முறையில் ஆடி 3 பவுண்டரிகளையும் ஒரு நேர் சிக்சரையும் விளாசினார். இவரும் மெஹதி ஹசனும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 79 ரன்களைச் சேர்த்தனர். மெஹிதி ஹசனுக்கு 2 கேட்ச்கள் விடப்பட்டது. அதைப் பயன்படுத்தி அவர் 101 பந்துகளில் 74 ரன்கள் என்று டாப் ஸ்கோராக முடிந்தார். தன்ஜித் தொடர்ந்து சிறப்பாக ஆடி மேலும் இரண்டு சிக்சர்களை விளாசியதோடு போதிய அளவுக்கு பவுண்டரிகளையும் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் 24வது ஓவரில் அல்ஜாரி ஜோசப்பிடம் இவரும் வீழ்ந்தார்.

இவருக்குப் பிறகு இறங்கிய அஃபிப் ஹுசைன் (28), மிராஸ் இணைந்து மேலும் 54 ரன்களைச் சேர்த்தனர்.. அஃபீபை ஷெப்பர்ட் வீழ்த்தினார். 38வது ஓவரில் மெஹதி ஹசனும் ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பிறகு 2வது டெஸ்டில் அற்புத சதம் கண்ட ஜாகிர்அலியும் மஹமுதுல்லாவும் இணைந்து 96 ரன்களை அதிரடியாகச் சேர்த்தனர்.

கடைசி 10 ஒவர்களில் இருவரும் 84 ரன்களைச் சேர்த்தனர். மஹமுதுல்லா 44 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 50 ரன்களையும், அல்ஜாரி ஜோசப்பின் பந்தை மைதானத்துக்கு வெளியே சிக்சர் விளாசிய ஜாகிர் அலி மூன்று சிக்சர்களுடன் 40 பந்துகளில் 48 ரன்கள் விளாச வங்கதேசம் 50 ஓவர்களில் 294 ரன்களை 6 விக்கெட்டுகளை இழந்து குவித்தது.

மே.இ.தீவுகள் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 67 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ரொமாரியோ ஷெப்பர்ட் 51 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சேசிங்கில் பிராண்டன் கிங், எவின் லூயிசை சடுதியில் இழந்து வெஸ்ட் இண்டீஸ் 9வது ஓவரில் 27/2 என்று ஆனது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் ஷாகிப், நவீத் ரானா அபாரமாக வீசினர். நஹித் ரானா கிட்டத்தட்ட 149 கிமீ வேகப்பந்தில் அதிரடி மன்னன் எவின் லூயிஸை எல்.பி. செய்தார். பிறகு கேப்டன் ஷேய் ஹோப் (86 ரன், 88 பந்து, 6 பவுண்டரி 3 சிக்சர்) கேசி கார்ட்டி (21) இணைந்து 67 ரன்களை 3வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர் அப்போது கார்ட்டி வெளியேறினார்.

நடுவில் 28 பந்துகள் பவுண்டரி கொடுக்காமல் வெஸ்ட் இண்டீசை முடக்கியது வங்கதேசம். பிறகு ஷேய் ஹோப், மிராஸை ஒரு சிக்ஸ் விளாசி தடைய உடைத்தார். பிறகு ருதர்போர்ட் மெஹிதியை 1 சிக்சர், ஒரு பவுண்டரி விளாச ஆட்டம் மே.இ.தீவுகள் பக்கம் திரும்பியது. ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு திணறி ருதர்போர்ட் ரானாவிடம் ஹெல்மெட்டில் அடிவாங்கினார். ஆனால் செட்டில் ஆன பிறகு வெளுத்து வாங்கி விட்டார். மெஹிதிதான் ஹோப்பை வீழ்த்தி மீண்டும் ஒரு வெற்றிக் கதவைத் திறந்தார்.

ஆனால், கிரீவ்ஸ் இறங்கி 3 பவுண்டரிகளை விளாசி உத்வேகத்தைத் தக்கவைக்க, ஆரம்பத்தில் 29 பந்துகளில் 19 என்று இருந்த ருதர்போர்ட் அடுத்த 51 பந்துகளில் 94 ரன்களை விளாசினார். 47 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் அடுத்த 30 பந்துகளில் சதம் கண்டு 77 பந்துகளில் 100ஐயும் 80 பந்துகளில் 113 ரன்களையும் எட்டி ஆட்டமிழந்தார். ருதர்போர்ட் இதன் மூலம் 5 போட்டிகளில் தொடர்ந்து அரைசதத்திற்கும் கூடுதலான ஸ்கோர்களை எட்டி செம பார்மில் இருக்கிறார்.

ஷெர்பானே ருதர்போர்ட் மொத்தம் 7 பவுண்டரிகள் 8 சிக்சர்களை விளாசினார். இவருக்கு உறுதுணையாக ஜஸ்டின் கிரேவ்ஸ் 31 பந்துகளில் 41 ரன்களை எடுக்க 47.4 ஓவர்களில் 295/6 என்று வெற்றி பெற்றது மே.இ.தீவுகள். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக ஷெர்பானே ருதர்போர்ட் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x