Published : 07 Dec 2024 03:24 PM
Last Updated : 07 Dec 2024 03:24 PM
அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸ்சில் 337 ரன்களை குவித்துள்ளது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி 140 ரன்களை குவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் வெள்ளிக்கிழமை (டிச.6) தொடங்கியது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 86 ரன்களைச் சேர்த்தது. இரண்டாவது நாளான இன்று (டிச.7) நாதன் மெக்ஸ்வீனி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டீவன் ஸ்மித் 2 ரன்களில் அவுட்டானார். இதற்கு பிறகு விக்கெட்டை விடக்கூடாது என தீர்மானித்த ஆஸ்திரேலியா வீரர்கள் மார்னஸ் லபுஷேன் - டிராவிஸ் ஹெட் இணைந்து மிரட்டினர். லபுஷேன் 116 பந்துகளில் அரைசதம் கடந்தார். 55வது ஓவரில் நிதிஷ்குமார் வீசிய பந்தில் 64 ரன்களுடன் கிளம்பினார் லபுஷேன்.
அதன்பிறகு தான் தொடங்கியது டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவம். 63 பந்துகளில் அரைசதம் கடந்த ஹெட் அடுத்து 111 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். மறுபுறம் மிட்செல் மார்ஷ் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரி 15 ரன்களில் விக்கெட். யார் வந்தாலும், போனாலும் டிராவிஸ் ஹெட் சிக்சர்களை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். 4 சிக்சர்களை விளாசினார். அந்த அணியில் வேறு யாரும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. 82-வது ஓவரில் சிராஜ் வீசிய பந்தில் அவுட்டாகி 141 பந்துகளுக்கு 140 ரன்களை குவித்து முத்திரை பதித்தார் டிராவிஸ் ஹெட். அவர் அவுட்டாகும்போது 315 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலியா.
அடுத்து வந்த பாட் கம்மின்ஸ் 12 ரன்கள், மிட்செல் ஸ்டார்க் 18 ரன்கள், ஸ்காட் போலண்ட் டக்அவுட்டாக 87.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 337 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 157 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 2-வது இன்னிங்ஸை தொடங்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT