Published : 07 Dec 2024 10:03 AM
Last Updated : 07 Dec 2024 10:03 AM
இங்கிலாந்தின் புதிய வேகப்பந்து ‘சென்சேஷன்’ கஸ் அட்கின்சன் நியூஸிலாந்தின் கடைசி 3 வீரர்களை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். நியூஸிலாந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 155 ரன்கள் பின்னடைவு கண்டுள்ளது, இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் 56 ஓவர்களில் 272 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று சாத்தி எடுத்து வருகின்றனர்.
கஸ் அட்கின்சன் ஹாட்ரிக் சாதனை கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இங்கிலாந்து பவுலர் நிகழ்த்தும் சாதனையானது. முதலில் நியூஸிலாந்து டெய்ல் எண்டர் நேதன் ஸ்மித்தை பவுல்டு செய்தார் அட்கின்சன். அடுத்து மேட் ஹென்றி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த பந்தே டிம் சவுத்தியை எல்.பு. முறையில் வீழ்த்தி கஸ் அட்கின்சன் சாதனை புரிந்தார்.
இதன் மூலம் அட்கின்சன் 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் பிரைடன் கார்ஸ் 46 ரன்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். நியூசிலாந்து இன்று காலை 86/5 என்று தொடங்கி 39 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. கார்ஸ் நேற்று ஆட்டமிழக்காமல் இருந்த டாம் பிளண்டெலை 16 ரன்களுக்கு பவுல்டு செய்தார். வில் ரூர்க் 2 பந்துகள் நின்று எல்.பி. ஆகி டக் அவுட் ஆனார்.
டாப் ஆர்டர் வீரர்களே அட்கின்சனின் துல்லியம் மற்றும் வேகத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியாத போது நியூஸிலாந்தின் கீழ் வரிசை வீரர்கள் எப்படித் தாக்குப் பிடிக்க முடியும்?
155 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலையை அடுத்து இறங்கிய இங்கிலாந்து மேலும் தன் பிடியை இறுக்கும் விதமாக ஆடி வருகிறது பென் டக்கெட் 112 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து சவுதி பந்தில் பிளேய்ட் ஆன் ஆனார். ஜேகப் பெத்தல் 118 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 96 ரன்களில் சவுதியின் வெளியே போன பந்தை விரட்டி ஆடி கேட்ச் ஆகி வெளியேறினார்.
தற்போது ஜோ ரூட், முதல் இன்னிங்ஸ் சத நாயகன் ஹாரி புரூக் இணைந்து விரைவு கதியில் ரன்களை எடுத்து கூட்டணி அமைத்து வருகின்றனர். இங்கிலாந்து அணி 289/3 என்று 444 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT