Published : 06 Dec 2024 02:12 PM
Last Updated : 06 Dec 2024 02:12 PM

43/4-லிருந்து ஹாரி புரூக் பவுண்டரி மழையில் அதிரடி சதம்: பேட்டிங்கில் நியூஸிலாந்து சொதப்பல்

வெலிங்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 280 ரன்களுக்கு மடிய, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்து முதல் நாள் ஆட்டத்தை முடித்துள்ளது.

முதல் டெஸ்ட்டிலும் அணியை சிக்கலிலிருந்து மீட்ட ஹாரி புரூக் அந்த டெஸ்ட் போட்டியிலும் அதிரடி சதம் கண்டு 170+ ரன்களைக் குவித்தார். இன்றும் 43/4 என்று தடுமாறிய நிலையில் புரூக்கும் (123 ரன்கள், 115 பந்துகள், 11 பவுண்டரிகள் 5 சிக்சர்கள்), ஆலி போப்பும் (66) இணைந்து 26 ஓவர்களில் 174 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்து அணியை மீட்டனர். 2 டெஸ்ட்களில் 2 சதம் என்று புரூக் பின்னி எடுத்து வருகிறார்.

நேதன் ஸ்மித்தின் மூலம் ரன் அவுட் ஆன புரூக்கிற்குப் பிறகு நியூஸிலாந்து சடுதியில் இங்கிலாந்தை சுருட்டியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய ஜாக் கிராலி ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 23 பந்துகளில்17 என்று அபாயகரமாகத் தொடங்கினார், ஆனால் ஹென்றி 4 ஓவர்களை மெய்டன்களாக வீசியதோடு கிராலியையும் பென் டக்கெட்டை டக்கிலும் வெளியேற்றினார்.. ஆலி போப் டவுனில் ஜேக்கப் பெத்தல் இறக்கப்பட்டார். அவர் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து நேதன் ஸ்மித்தின் பவுன்சரில் பிளண்டெலிடம் கேட்ச் ஆனார்.

ஜோ ரூட் 3 ரன்கள் எடுத்து நேதன் ஸ்மித்தின் பேக் ஆஃப் லெந்த் பந்தை ஆட முயன்று முதல் ஸ்லிப்பில் மிட்செலின் அட்டகாசமான கேட்சிற்கு வெளியேற இங்கிலாந்து 43/4 என்று ஆனது.

அதன் பிறகு ஹாரி புரூக் அடித்து நொறுக்கத் தொடங்கினார் தன் 8வது சதத்தை 91 பந்துகளில் எடுத்தார். ஆனாலும் புரூக் நிறைய முறை பீட்டன் ஆனார். கடந்த டெஸ்ட் போல் 5 லைஃப்கள் இவருக்குக் கிடைக்குமா என்று தெரியாத நிலையில் மீண்டும் ஒரு தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 11 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் விளாசினார். நம்பர் 6ல் இறங்கிய ஆலி போப் சரளமாக ஆடி 66 ரன்களை எடுத்து தொடரின் 2வது அரைசதத்தை எடுத்தார்.

புரூக் ரன் அவுட் ஆக ஆலி போப் வில் ரூர்கேயின் கூடுதல் பவுன்ஸ் ஆன பந்தில் வெளியேறினார். இவரோடு பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸையும் ரூர்கே வீழ்த்தினார். கடந்த போட்டியில் வெளுத்து வாங்கிய டெய்ல் எண்டர்களான கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் இந்த முறை சொற்ப ரன்களில் நேதன் ஸ்மித்திடம் வெளியேற கடைசி 21 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து 280 ரன்களுக்குச் சுருண்டது. நியூஸிலாந்து தரப்பில் நேதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளக் கைப்பற்றினாலும் 11.4 ஓவர்களில் 86 ரன்களை வாரி வழங்கினார். ரூர்க் 3 விக்கெட், ஹென்றி 2 விக்கெட். சவுதி மீண்டும் சாத்துமுறை வாங்கி 12 ஓவர் 62 ரன்கள் விக்கெட் இல்லை என முடிந்தார்.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைக்கும் பிட்சில் மீண்டும் நியூஸிலாந்து விக்கெட்டுகளை மடமடவென இழந்து 86/5 என்று நாளை முடித்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 37 ரன்களை எடுத்தார். டாம் லேதம் (17), டெவன் கான்வே (11), ரச்சின் ரவீந்திரா (3), டேரில் மிட்செல்(6), கேன் வில்லியம்சன் (37) ஆகியோர் பெவிலியன் திரும்பினர். ஆட்ட முடிவில் வில் ரூர்க் மற்றும் பிளெண்டல் கிரீசில் இருக்கின்றனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், அட்கின்சன், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் எடுக்க கார்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x