Published : 05 Dec 2024 05:17 PM
Last Updated : 05 Dec 2024 05:17 PM

பிளின்டாஃபை சமாளிக்க கில்கிறிஸ்ட் கையாண்ட உத்தி ‘புதிர்’ பும்ராவுக்கு எதிராக பலிக்குமா?

பெர்த் டெஸ்ட் படுதோல்விக்குப் பின் ஆஸ்திரேலிய ஓய்வறையில் வீரர்கள் முன் நிற்கும் பெரும் கேள்வி ‘பும்ரா’ என்னும் புதிரை கட்டவிழ்ப்பது எப்படி என்பதாகவே உள்ளது.

பெர்த் டெஸ்ட் போட்டியில் அவர் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்ததோடு அவர்களின் தன்னம்பிக்கையையே ஆட்டம் காணச் செய்துள்ளார். வலது கை பேட்டர்களுக்கு பந்தை காற்றில் உள்ளே வருமாறு செலுத்தி பிட்ச் ஆனதும் வெளியே ஸ்விங் செய்து வீழ்த்திய பும்ரா, இடது கை பேட்டர்களுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் இதையே செய்தார். வைட் ஆங்கிளிலிருந்து பந்தை உள்ளே வருமாறு காற்றில் செலுத்தி பிறகு சற்றே வெளியே எடுத்தார். இப்படியாக அவர் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் ஆகியோரைக் காலி செய்தார்.

இந்நிலையில், புகழ்பெற்ற 2005 ஆஷஸ் தொடரில் ஆடம் கில்கிறிஸ்ட் அனைத்து வடிவங்களிலும் 6 முறை ஆண்ட்ரூ பிளின்டாஃப்பின் வேகம் மற்றும் ஸ்விங்கை எதிர்கொள்ள முடியாமல் அவரிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஆனால், ஆடம் கில்கிறிஸ்ட் நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று விட்டு விடவில்லை. தன் பயிற்சியாளர் பாப் மியூல்மேனிடம் சென்று ஆலோசனை பெற்றார். பிளின்டாஃப் பந்து ரவுண்ட் த விக்கெட்டில் வந்து இப்போதைய பும்ரா போலவே காற்றில் உட்செலுத்தி வெளியே எடுத்தது. தொடர்ந்து கில்கிறிஸ்டை எட்ஜ் அவுட் ஆகச் செய்தது.

அதனைக் களைய 2006-07 ஆஷஸ் தொடரில் இப்படி ஆகக் கூடாது என்று பயிற்சியாள்ர் பாப் மியூல்மேனிடம் சிறப்புப் பயிற்சி எடுத்தார் ஆடம் கில்கிறிஸ்ட். இந்தப் பயிற்சியாளர்தான் அசாதாரண பவர் கிடைக்க கிளவ்வுக்குள் ஸ்குவாஷ் பந்தை வைத்துக் கொள்ள அறிவுறுத்தியவர் என்பது வேறு கதை. ஆனால், இந்த முறை கில்கிறிஸ்டுக்கு மிகவும் சீரிய பயிற்சியை அளித்தார்.

தெற்குப் பெர்த்தில் மியுல்மேனுக்குச் சொந்தமான உள்ளரங்கு வலைப்பயிற்சி தளத்தில் பவுலிங் மெஷின் கொண்டு பயிற்சியளித்தார். அதாவது பவுலிங் மெஷினை ரவுண்ட் த விக்கெட்டில் கிட்டத்தட்ட பக்கத்துப் பிட்ச் அளவுக்கு வைடு ஆங்கிளில் நிறுத்தி வெளியே ஸ்விங் ஆகுமாறு பந்துகளை மெஷினிலிருந்து செலுத்தினார். புதிய பந்துகள் கில்கிறிஸ்ட் மட்டையைப் பலமுறை கடந்து சென்றது.

இந்தப் பயிற்சிக்குப் பிறகே 2006-07 ஆஷஸ் தொடரில் பிளின்டாஃபிடம் கில்கிறிஸ்ட் விக்கெட்டைக் கொடுக்கவில்லை, எப்படி விராட் கோலி, ஒரு தொடர் முழுதும் ஆண்டர்சனிடம் அவுட் ஆகவில்லையோ அப்படி. ஆனால் பிளின்டாஃபும் காயம் காரணமாக தன்னிடம் இருந்த நச்சு பவுலிங் தன்மையை 2006-07-ல் இழந்திருந்தது வேறு கதை. ஆனால் பயிற்சி கைகொடுத்ததில் 57 பந்துகளில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் கண்டார் கில்கிறிஸ்ட்.

அது போன்ற ஒன்றை பும்ராவுக்கு எதிராக இன்று கடைப்பிடிக்க முடியுமா என்பதே இப்போதைய கேள்வி. இப்போதெல்லாம் பவுலிங் மெஷின் என்பது பழைய கதை ஆகிவிட்டது. நவீன பேட்டர்கள் பவுலிங் மெஷினைக் கொண்டு பயிற்சி எடுப்பதில்லை. ஏனெனில் பவுலிங் மெஷினில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி வருவது பேட்டிங்கைக் காலி செய்து விடும் என்று கருதுகின்றனர். பும்ரா போன்ற பவுலர்களின் கைத்திறமை, சிந்தனை, யுக்தி போன்றவை ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தினுசு, ஆகவே ரியல்டைம் பந்துகள் போல் மெஷின் கொடுக்காது.

இப்போது ஆஸ்திரேலிய பேட்டர்கள் பயிற்சியாளர்களை த்ரோ செய்யச் செய்து பயிற்சி எடுக்கின்றனர். என்னதான் செய்தாலும் பும்ரா பந்தை ரிலீஸ் செய்யும் பலதரப்பட்ட கோணங்களை நிச்சயம் எந்த ஒரு த்ரோ டவுனும் மறு உற்பத்தி செய்ய முடியாது. அவரது ஆக்‌ஷனின் விந்தையானது ஆக்‌ஷனை வைத்து அவுட் ஸ்விங்கரா இன்ஸ்விங்கரா என்பதைக் கணிக்க முடியவில்லை என்பதுதான் ஆஸ்திரேலிய பேட்டர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை. இரண்டுக்கும் பந்தின் தையல் பொசிஷனும் பும்ராவிடம் ஒரே மாதிரிதான் உள்ளது. எப்படி கணிக்க முடியும்?

வாசிம் அக்ரம் போல் குறைந்த ரன் அப்பில் வந்து கையை உயர்த்தி ரிஸ்ட்டை நன்றாகப் பயன்படுத்துகிறார். விரைவு கதியில் கையைச் சுழற்றி வீசுவதும் ரிஸ்ட் பொசிஷனும் பும்ராவை கணிப்பது மிகவும் கடினமாக்கியுள்ளது. அனைத்தையும் விட பும்ராவின் ஸ்டம்ப் அட்டாக். இது ஆஸ்திரேலிய பவுலர்களால் செய்ய முடியாதது.

பெரிய பெரிய வேகப்பந்து வீச்சாளர்களின் புதிரையெல்லாம் அவிழ்க்க முடிந்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தின் think-tank-களினால் பும்ரா என்னும் புதிரை கட்டவிழ்க்க முடியவில்லை என்பதே எதார்த்த உண்மை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x