Published : 05 Dec 2024 12:57 AM
Last Updated : 05 Dec 2024 12:57 AM

15 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மே.இ.தீவுகளை வீழ்த்தியது வங்கதேசம்

ஜமைக்கா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜமைக்காவில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 164 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் 146 ரன்களும் எடுத்தன. 18 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 59.5 ஓவர்களில் 268 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜாகர் அலி 91, ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 287 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 4-வது நாள் ஆட்டத்தில் 50 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக கவேம் ஹாட்ஜ் 55, கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 43, ஜஸ்டின் கிரீவ்ஸ் 20 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளரான தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 என சமனில் முடித்தது. முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

மேற்கு இந்தியத் தீவுகளில் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 15 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக 2009-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் மண்ணில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய வங்கதேச அணி தற்போது வெற்றியை பதிவு செய்துள்ளது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x