Published : 03 Dec 2024 03:43 AM
Last Updated : 03 Dec 2024 03:43 AM

பும்ராவை எதிர்கொள்வதில் உள்ள சாவல்களை எனது பேரக்குழந்தைகளிடம் பெருமையாக கூறுவேன்: சொல்கிறார் ஆஸி. பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்

அடிலெய்டு: இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் எனவும், அவரை எதிர்கொள்வதில் உள்ள வலிமையான சவாலைப் பற்றி தனது பேரக்குழந்தைகளிடம் பெருமையுடன் கூறுவேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டனாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 8 விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். மேலும் இந்த உயர்மட்ட செயல் திறன் காரணமாக ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் கூறியதாவது:

ஜஸ்பிரீத் பும்ரா மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார். அதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அவர், சவால் கொடுக்கக்கூடியவராக திகழ்கிறார். பும்ராவுக்கு எதிராக விளையாடுவது சிறப்பானது. எதிர்காலத்தில் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது பேரக்குழந்தைகளிடம் பும்ராவுக்கு எதிராக விளையாடியதை பெருமையாக கூறலாம். இன்னும் சில முறை பும்ராவை எதிர்கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் அவர், சவால் அளிக்கக்கூடியவராகவே இருக்கிறார்.

எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்கொள்வதற்காக என்னிடம் ஆலோசனை கேட்டது இல்லை. இதை நான் உறுதியாக கூறுவேன். ஒவ்வொருவரும் அவர்களுடைய வழியில் செல்வார்கள். கடந்த முறை அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டி விரைவாக முடிவடைந்திருந்தது. அதை மீண்டும் செய்தால் நன்றாக இருக்கும். மறுபடியும் அது போன்று பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அதைப் பார்க்க அதிக நேரம் ஆகாது. எனினும் இந்த வாரம் அது நடக்கும் என்று நினைக்கவில்லை.

நாங்கள் பகலிரவு டெஸ்ட் போட்டி விளையாடி நீண்ட காலமாகிவிட்டது. இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடி உள்ளனர். அவர்களுடைய அணியில் உள்ள ஒவ்வொருவரும் போதுமான அனுபவத்தை பெற்றுள்ளனர். இதனால் மிக விரைவாக போட்டிக்கு தகுந்தவாறு பழகிவிடுவார்கள். எனவே தயாராகுவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை.

எங்கள் அணிக்குள் எந்தவித பிளவும் இல்லை. எங்களை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இது தனிப்பட்ட விளையாட்டாக உள்ளது. எனவே பேட்ஸ்மேன்கள் வலுவாக இருக்க விரும்புகிறோம். கடந்த காலங்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார்கள் என்பது தெரியும், அவர்கள் எங்களை நிறைய சிக்கலில் இருந்து மீட்டுள்ளனர். ஒரு பேட்டிங் குழுவாக, நாங்கள் போதுமான ரன்கள் எடுத்தால், நாங்கள் எங்களை ஒரு சிறந்த நிலையில் வைத்திருப்போம் என்பதை நாங்கள் அறிவோம்.

கடந்த காலத்தில் கஷ்டங்களை சமாளித்துள்ளோம். கடந்த ஆண்டு சில சவாலான நேரங்களை எதிர்கொண்டோம் மற்றும் இரண்டு சவாலான டெஸ்ட் போட்டிகளை சந்தித்தோம். கடந்த வாரம் எங்களுக்கு நல்லதாக அமையவில்லை. ஆனால் எங்களுக்கு இன்னும் 4 வாய்ப்புகள் கிடைத்துள்ளன, இதில் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் செய்து வருவதை போன்று சிறப்பாக செயல்படுவோம். கடந்த இரு ஆண்டுகளில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பல்வேறு அணிகள் அதில் இருந்து மீண்டு வந்துள்ளன. தொடரை இழந்த அணிகள் கூட மீண்டு வந்து சிறப்பாக விளையாடி உள்ளன.

இவ்வாறு டிராவிஸ் ஹெட் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x