Published : 02 Dec 2024 05:19 PM
Last Updated : 02 Dec 2024 05:19 PM

“மும்பை இந்தியன்ஸின் இதயத் துடிப்பே இஷான் கிஷன் தான்” - ஹர்திக் பாண்டியா உருக்கம்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கிய வீரராக 2018 ஐபிஎல் தொடர் முதல் 2024 ஐபிஎல் தொடர் வரை ஆடிய இஷான் கிஷனை இழந்தது வருத்தத்திற்குரியது என்றும், மும்பை இந்தியன்ஸ் அணியின் இருதயத் துடிப்பே இஷான் கிஷன் தான் என்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இஷான் கிஷனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. அதோடு மும்பை இண்டியன்ஸுடனான 7 ஆண்டுகால தொடர்பும் அவருக்கு முடிந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா தன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மும்பை இந்தியன்ஸ் அணியின் இருதயத் துடிப்பே இஷான் கிஷன் தான். அவர் ஓய்வறையின் புத்துணர்ச்சி மற்றும் புத்தாற்றல். அவரைத் தக்கவைக்க முடியாத போதே அவரை ஏலத்தில் மீண்டும் அணிக்குள் கொண்டு வருவது கடினம் என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில் இஷான் கிஷனின் திறமையும் அவரது கிரிக்கெட்டும் அத்தகையது.

மும்பை இந்தியன்ஸ் ஓய்வறையை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பார். நிறைய சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். அவர் மூலம் அணியில் ஒரு வித நேயமும் பரிவுணர்வும் இருந்தது. இஷான் கிஷன் தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு தனி நேயத்தைக் கொண்டு வந்தவர். இதைத்தான் இப்போது நாங்கள் அவரை இழந்ததன் மூலம் இழந்து நிற்கிறோம். இஷான் கிஷனே! நீதான் மும்பையின் பாக்கெட் வெடிகுண்டு. நாங்கள் உன்னை ரொம்பவும் மிஸ் செய்கிறோம். நாங்கள் அனைவரும் உன்னை நேசிக்கிறோம்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்திருக்கும் இளம் வீரர்களுக்கு என் மெசேஜ் இதுதான்: இங்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் தீப்பொறி இருக்கிறது, திறமை இருக்கிறது என்று பொருள், என்னைக் கண்டுப்பிடித்தனர், பும்ராவைக் கண்டுப்பிடித்தனர். க்ருணால் பாண்டியா, திலக் வர்மா, இவர்கள் இப்போது நாட்டுக்காக ஆடுகின்றனர். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கடினமாக பயிற்சி செய்யுங்கள், உங்களை வெளிப்படுத்துங்கள். மும்பை இண்டியன்ஸ் உங்கள் திறமைகளை வளர்த்தெடுக்கும் அனைத்து ஏற்பாடுகளையும் வசதிகளையும் கொண்ட அணி.

மும்பை அணி ஏலத்தில் எடுத்த அணி நல்ல அணியாக அமைந்துள்ளது. அனுபவசாலியான போல்ட் மீண்டும் வந்து விட்டார். தீபக் சஹார், வில் ஜாக்ஸ், ராபின் மின்ஸ், ரிக்கிள்டன் ஆகிய புதுமுகங்கள் மூலம் அணிக்குத் தேவையான அனைத்து அடிப்படைகளையும் நிறைவு செய்து விட்டோம் என்றே கருதுகிறேன்” என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x