Published : 28 Jun 2018 09:20 AM
Last Updated : 28 Jun 2018 09:20 AM

தென் கொரியாவிடம் தோற்கும் அளவுக்கு ஜெர்மனி மோசமான அணியா?- 3 காரணங்கள்

உலகக்கோப்பைக் கால்பந்து 2018-ன் முதல் அதிர்ச்சி இன்று நிகழ்ந்தது. வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலையில் இறங்கிய ஜெர்மனி, தென் கொரியாவிடம் கடைசி நிமிட கோல்களில் 2-0 என்று உதை வாங்கி வெளியேறியது.

1938க்குப் பிறகு ஜெர்மனி உலகக்கோப்பையிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. அதே போல் கடந்த 5 உலகக்கோப்பைத் தொடர்களில் கடந்த முறை உலகக்கோப்பை சாம்பியன்கள் முதல் சுற்றிலேயே வெளியேறிய வரலாற்றுப் பட்டியலில் ஜெர்மனியும் இடம்பெற்றது.

மெக்சிகோ அங்கு இதே பிரிவில் ஸ்வீடனிடம் 3-0 என்று படுதோல்வியடைந்தாலும் ஜெர்மனி வெளியேறியதையடுத்து மெக்சிகோவும் ஸ்விடனும் இந்தப் பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறின, ஒருவேளை ஜெர்மனி, தென் கொரியாவை வீழ்த்தியிருந்தால், நன்றாக வீழ்த்தியிருந்தால் மெக்சிகோ வெளியேறியிருக்கும், ஆகவே மெக்சிகோ அணி ஆசிய அணிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

பிரிவு எஃப்-ல் நேற்று இறுதித் தீர்ப்பு நாள். கடைசி வரை கோல் இல்லாமல் இரு அணிகளும் மோதின, ஆனால் திடீரென 2 கோல்களை தென் கொரியா அடித்தது, உலக சாம்பியன் ஜெர்மனி அதிர்ந்தது, அந்நாட்டு ரசிகர்கள் கடும் கோபாவேசமடைந்தனர், அவர்களால் நம்ப முடியவில்லை, நம் இந்த அணி இவ்வளவு மோசமா என்று அவர்களால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்ல.

அதிகம் அறியாத, இந்தப் போட்டிக்குப் பிறகு நினைவில் வைத்துக் கொள்ள முடியாத பெயர்களான யங் க்வான் கிம், ஹியூங்-மின் சன் தலா 1 கோலை அடித்து ஜெர்மனிக்கு இடுகாட்டைக் காட்டினர். வாழ்நாளில் மறக்க முடியாத உலகக்கோப்பை வெற்றி தென் கொரியாவுக்கு, மற்றொரு புறம் ஜோக்கிம் லோ அணிக்கு வலியும், அழுகையும், வருத்தங்களும் துயரங்களுமே எஞ்சியது.

ஏன் மோசமான தோல்வி?

ஜெர்மனி இந்த உலகக்கோப்பைக்கு கடந்த உலகக்கோப்பை சாம்பியனாக மட்டும் வரவில்லை, கான்பெடரேஷன் கோப்பையை வென்ற அணியாகவும் வந்தது. ஜெர்மனியின் கால்பந்து அகாடமி அமைப்பு முறை உலகமே வியந்தோதும், பொறாமைப்படும் ஓர் அமைப்பாகும். ஆனால் அதிலிருந்து ஓர் இரண்டாம் தர அணியா என்பதை மக்களால் நம்ப முடியவில்லை.

மாறாக தென் கொரியா அணி இந்த உலகக்கோப்பையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஸ்வீடன், மெக்சிகோ அணிகளிடம் தோல்வி அடைந்தது. உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றில் கத்தார், சீனாவிடம் தோல்வி அடைந்த அணியாகும் தென் கொரியா.

எதிரியான டோனி குரூஸ், வீடியோ ரெஃபரல்; தண்டமான வெர்னர், ஹம்மெல்ஸ்

தென் கொரிய வீரர் கிம் யங் க்வானின் கோல் முதலில் ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டு கோல் மறுக்கப்பட்டது. ஆனால் வீடியோ ரெஃபரல் கேட்ட போதுதான் தெரிந்தது அது ஜெர்மனி வீரர் டோனி குரூஸ்தான் அவரிடம் பந்தைக் கொடுத்தார் என்று. அன்று ஸ்வீடனுக்கு எதிராகவும் முதல் கோலை ஸ்வீடன் அடிக்கக் காரணமாக இருந்தவர் டோனி குரூஸ், ஆனால் அதனை ஈடுகட்டும் விதமாக இந்த உலகக்கோப்பையின் பேசப்படும் ஒரு கோலை கடினமான கோணத்திலிருந்து அடித்து ஜெர்மனிக்கு ஒரு வெற்றியையும் பெற்றுத்தந்தார், மீண்டும் டோனி குரூஸ் மக்களின் கோபத்துக்கு தற்போது ஆளாகியுள்ளார்.

தென் கொரியாவின் 2வது கோல் ஜெர்மனி கோல் கீப்பரின் கேலிக்கூத்தால் விளைந்ததாகும். ஜூ சே ஜோங்கின் லாங் பாஸை சன் ஹியூங் மின் துரத்திச் சென்று காலியாக இருந்த வலைக்குள் திணித்தார், கடந்த உலகக்கோப்பையில் பெரிய ஜாம்பவனாக இருந்த நியூயர் கடைசியில் காமெடியனாக இன்று மாறிவிட்டார். கடைசியில் கூட ஜெர்மனிக்கு கோல் வாய்ப்பு கிடைத்தது, அதனை ஹம்மெல்ஸ் வீணடித்தார். 8 அடிக்கு முன்னாள் கிடைத்த வாய்ப்பாகும் அது.

மேலும் ஜெர்மனி தடுப்பு வியூகத்தில் இருவர் சரியாக இல்லை. தாமஸ் முல்லர் இந்த உலக்கக்கோப்பையில் ஜெர்மனியின் சுமையாகத் திகழ்ந்தார், அவர் அதனால் உட்கார வைக்கப்பட்டார். நியூயர் தனது வழக்கமான டச்சில் இல்லை, அவருக்குப் பதிலாக மார்க் ஆந்த்ரே டெர்-ஸ்டீஜனை கொண்டு வந்திருக்க வேண்டும்.

மேலும் ஆட்டம் முழுதும், தென் கொரியாவை எதிர்த்தாக்குதல் நடத்த விடக்கூடாது என்பதுதான் உத்தியாக இருந்தது.

அதே போல் வெர்னர் சரியான ஸ்ட்ரைக்கர் அல்ல என்றும் கூறப்படுகிறது, அவர் வலது புறமும் இடது புறமும் செல்கிறார், இதனால் நடுவில் நல்ல ஸ்ட்ரைக்கர் இல்லை என்று நிபுணர்களால் கருதப்படுகிறது.

ஸ்வீடனுக்கு எதிராக வென்ற போட்டியில் மெசுட் ஓஸில், சமி கேடிடா ஆடவில்லை, உட்கார வைக்கப்பட்டனர், ஆனால் நேற்றைய முக்கியப் போட்டியில் இவர்களைக் கொண்டுவந்தது பயனளிக்கவில்லை. இருவரிடமும் வேகமும் இல்லை உத்வேகமும் இல்லை.

தென் கொரிய வெற்றிக்கான 3 காரணங்கள்:

தென் கொரிய வீரர்கள் யங் சன் யுன், யங் க்வான் கிம் ஆகியோர் பேக் லைனைக் கவனித்துக் கொள்ள ஃபுல் பேக் வீரர்கள் அங்கு குவிய தென் கொரிய பாக்ஸ் நெரிசலாக அமைந்து ஜெர்மனி ஊடுருவ முடியாமல் போனது. ஜெர்மனி கிராஸ்கள் அனைத்தும் பாக்ஸிற்குள் வந்தாலும் ஜெர்மனி ஸ்ட்ரைக்கர்களை கொரியா சிறபபாக மார்க் செய்தது.

தென் கொரியா ஒரு காட்டுத்தனமான கால்பந்தாட்டத்தை வெளிப்படுத்தி பயமற்ற அணுகுமுறையில் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று ஆடியதால் உத்வேகம் கூடுதலாக இருந்த்து. இந்தக் காட்டுத்தனமான கால்பந்தினால் 4 வீரர்களுக்கு மஞ்சள் அட்டைக் காட்டப்பட்டது. இது ஒரு உத்தியாகவே கடைபிடிக்கப்பட்டது, இது ஜெர்மனியை நிலைகுலையச் செய்தது. இப்படி ஆடும் அணியை வீழ்த்துவது கடினம்.

இரண்டாவது தென் கொரியா தனது தலைஷாட்களை அற்புதமாகக் கட்டுப்படுத்தியது ஜெர்மனி ஷாட்களை தடுத்தது, அதன் கோல் கீப்பர் சோ ஹியூன் வூ அசாதாரணமான கோல் கீப்பர். குறைந்தது 7 சேவ்களை அவர் செய்திருப்பார். மேலும் ஜெர்மனி வீரர்களை பயமற்ற முறையில் தடுத்தனர் தென் கொரிய வீரர்கள்.

மூன்றாவதாக, ஹியூங் மின் சன், சியோன் மின் மூன் ஆகிய இருவர்களும் தங்களுக்குள்ளேயே பந்தை ஒத்தைக்கு ஒத்தை ஆடி எடுத்து சென்ற போது நடுக்களத்தில் உள்ள வீரர்கள் ஜெர்மன் கோலை நோக்கி முன்னேற நிறைய நேரமும் வாய்ப்பும் இருந்தது, அப்போதெல்லாம் ஜெர்மனி பந்தை அவர்களிடமிருந்து பிடுங்க முயற்சிக்காமல் தடுக்க முயலாமல் வாளாவிருந்தது. முதல் பாதியிலேயே தென் கொரியா கோல் அடித்திருக்கும்.

தென் கொரிய கோல் கீப்பர் சோ ஹியுன் வூவின் ஒரு சேவ் மிகவும் முக்கியமானது. ஜெர்மனி வீரர் கோரெட்ஸ்கா பாக்ஸில் சுதந்திர ஜீவியாக இருந்த போது தலையால் முட்டிய ஒரு பந்து நிச்சயம் கோல்தான். ஆனால் பறந்து தடுத்தார் சோ ஹியூன்.

மேலும் ஹம்மெல்ஸ், கோம்ஸ், வெர்னர் ஆகியோரது கோல் இலக்கு முயற்சிகளையும் சோ ஹியுன் முறியடித்தார். இவரை முறியடிக்க இந்த ஜெர்மனி தரமான அணியாகத் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x