Published : 30 Nov 2024 10:03 AM
Last Updated : 30 Nov 2024 10:03 AM
பெர்த் டெஸ்ட் போட்டியில் வரலாறு காணாத தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணியின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அடிலெய்ட் டெஸ்ட்டிலிருந்து முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அடிலெய்ட் பிங்க் பந்து பகலிரவுப் போட்டியில் இதுவரை ஆஸ்திரேலியா தோற்றதில்லை. இந்திய அணியின் கடந்த தொடரில் இங்குதான் 36 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. ஜோஷ் ஹேசில்வுட் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். இந்நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் விலகலால் ஆஸ்திரேலிய அணியில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. ஏனெனில் பெர்த் டெஸ்ட்டில் இவர் இந்தியா 150 ஆல் அவுட் ஆன முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
ஹேசில்வுட்டுக்குப் பதிலாக இதுவரை ஒருநாள் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஷான் அபாட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் 30 வயது வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் டாக்கெட் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 40 முதல் தரப் போட்டிகளில் குவீன்ஸ்லாந்து அணிக்காக 142 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
ஒருமுறை 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டாக்கெட் சமீபத்தில் மக்காயில் நடந்த இந்தியா ஏ அணிக்கு எதிரான வெற்றியில் 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது கவனிக்கத்தக்கது. டாக்கெட் டெஸ்ட் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டால் இவர் ஆஸ்திரேலியப் பூர்வக்குடியைச் சேர்ந்த 6வது வீரராகத் திகழ்வார்.
ஹேசில்வுட் காய விலகல் ஆஸ்திரேலிய பூர்வக்குடி பவுலர் ஸ்காட் போலண்ட் லெவனில் நுழைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. விக்டோரியா அணியைச் சேர்ந்த இவர் இதுவரை ஆஸ்திரேலியாவில் 6 டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்டுகளை, 12.21 என்ற சராசரியில் கைப்பற்றியுள்ளார். பின்க் பந்து போட்டிகளில் 13.71 என்ற சராசரியை வைத்துள்ளார் போலண்ட்.
ஷான் அபாட் முன்பு பார்டர் கவாஸ்கர் டிராபியில் 2020-21 டெஸ்ட் தொடரில் அணியில் இருந்தார், ஆனால் வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2023 ஆஷஸ் தொடர் அணியிலும் இருந்தார். அப்போதும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அடிலெய்ட் டெஸ்ட் ஆஸி. அணி வருமாறு: பாட் கமின்ஸ், ஷான் அபாட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாக்கெட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கவாஜா, லபுஷேன், நேதன் லயன், மிட்ச் மார்ஷ், நேதன் மெஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்ச் ஸ்டார்க், ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT