Published : 28 Nov 2024 03:39 PM
Last Updated : 28 Nov 2024 03:39 PM
கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்ட நேர முடிவில் கிளென் பிலிப்ஸ் 41 ரன்களுடனும் டிம் சௌதி 10 ரன்களுடனும் நாட் அவுட்டாக இருந்தனர்.
நியூஸிலாந்து தரப்பில் கேன் வில்லியம்சன் 93 ரன்களில் கட் அட்கின்சன் பந்தில் ஆட்டமிழந்து சதத்தைக் கோட்டை விட்டார். கிரீன் டாப் பிட்சில் இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 6 ஆண்டுகளில் இப்போதுதான் கேன் வில்லியம்சன் 90+ ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
கிரீன் டாப் பிட்சில் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று எதிர்பார்த்தது போல் பீல்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கத்தில் ஸ்விங் ஆகும் என்ற எதிர்பார்ப்பு பலிக்கவில்லை, இங்கிலாந்து பவுலர்களுக்கு அவ்வளவு ஸ்விங் கிடைக்கவில்லை. மாறாக ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் 20 ஒவர்களில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
டெவன் கான்வே 2 ரன்களில் அட்கின்சன் வீசிய முதல் ஓவரில் ஃபுல் லெந்த் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். டாம் லேதம் ஆக்ரோஷமாக ஆடினார் 57 பந்துகளில் 44 ரன்களை எடுத்த போது உயரமான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கார்ஸ், லேதமின் எட்ஜைப் பிடித்தார், போப் கேட்ச் எடுத்தார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு எடுபடாததற்கு சிறிய உதாரணமே இன்று அவர்கள் கொடுத்த 35 உதிரி ரன்கள்.
இங்கிலாந்து பவுலிங் இந்த கிரீன் டாப்பிலும் எடுபடவில்லை. நியூஸிலாந்தின் 8 விக்கெட்டுகளும் அவர்களது தவறினால்தான் விழுந்தது. கேன் வில்லியம்சன் அருமையாக ஆடினார். 197 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அவர் 93 ரன்கள் எடுத்து அட்கின்சன் பந்தை கட் ஆட முயன்று கிராலியிடம் பாயிண்டில் கேட்ச் ஆனார். ஒருமுறை 28 ரன்களில் அவர் இருந்த போது பிரைடன் கார்ஸ் பவுன்சரில் ஹெல்மெட்டில் கிரில்லில் அடி வாங்கினார்.
ஆனால், இங்கிலாந்து ஏன் முதலில் பவுலிங்கை எடுத்தது என்பது குறித்து சில கேள்விகள் எழுந்து வருகின்றன. இங்கிலாந்து பவுலர்கள் 11 நோபால்களையும் 10 வைடுகளையும் வீசியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. நியூஸிலாந்தின் வளரும் ஸ்டார் ரச்சின் ரவீந்திரா 20 ரன்களில் அல்ட்ரா எட்ஜ் கண்டுகொள்ளப்படாமல் தப்பினார், ஆனால் 34 ரன்களில் இருந்த போது ஷோயப் பஷீரின் ஒன்றுமில்லாத பந்தை மேலேறி வந்து தாழ்வான ஃபுல்டாஸாக மாற்றிக் கொள்ள நேராக ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார், மோசமான ஷாட்.
ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. வில்லியம்சன் 93-ல் ஆட்டமிழந்தவுடன் டாம் பிளெண்டல் (17), நேதன் ஸ்மித் (3) ஆகியோரை பஷீர் வீழ்த்தினார். 3 விக்கெட்டுகளை சடுதியில் இழந்தது நியூஸிலாந்து. கிளென் பிலிப்ஸ் இறங்கி இங்கிலாந்தின் ஷார்ட் பிட்ச் உத்தியை சரியாகக் கவனித்தார். அவர் 41 ரன்கள் எடுக்க மேட் ஹென்றி 19 ரன்கள் என்று 45 ரன்கள் கூட்டணி அமைத்தனர். கடைசியில் ஹென்றி தன் விக்கெட்டை பஷீரிடம் தூக்கி எறிந்தார். லாங் ஆனை நோக்கிய பெரிய ஷாட் நேராக பீல்டர் கையில் போய் உட்கார்ந்தது.
கிறிஸ் வோக்ஸ் ஒரு பயனற்ற பவுலர் என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அட்கின்சன் 7 நோபால்களை வீசினார். நியூஸிலாந்தின் மோசமான ஷாட் தேர்வினால்தான் இங்கிலாந்து விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT