Published : 27 Nov 2024 03:22 PM
Last Updated : 27 Nov 2024 03:22 PM

இந்திய ஸ்பின்னர்களை ஏன் வாங்கவில்லை? - ஆகாஷ் அம்பானி விளக்கம்

நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது பவுலிங் வரிசையை ஸ்திரப்படுத்தியுள்ளதாக அதன் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இதோடு, இந்திய ஸ்பின்னர்கள் பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி இதோ: ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, பெவன் - ஜான் ஜேகப்ஸ், ராபின் மின்ஸ், ரியான் ரிக்கிள்டன், கிருஷ்ணன் ஸ்ரீஜித், ஹர்திக் பாண்டியா, நமன் தீர், வில் ஜாக்ஸ், ராஜ் அங்கத் பவா, விக்னேஷ் புதுர், அல்லா கஜன்ஃபார், கரண் ஷர்மா, மிட்செல் சாண்ட்னர், பும்ரா, தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட், அஸ்வினி குமார், ரீஸ் டாப்லி, சத்ய நாராயண ராஜு, அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ்.

இவர்களில் இரண்டு ஓவர்சீஸ் இடது கை வீச்சாளர்கள், இரண்டு ஓவர்சீஸ் ஸ்பின்னர்கள் உள்ளனர். இந்நிலையில் அணிச் சேர்க்கைக் குறித்து ஜியோ சினிமாவுக்கு ஆகாஷ் அம்பானி கூறும்போது, “எங்களின் டாப் 7 வீரர்களில் 4 வீரர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள். மீதமுள்ள 2 வீரர்களை அந்த 7 வீரர்களுக்குத் துணையாகத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. பவுலிங் சேர்க்கையை சரியாக்க விரும்பினோம். இரண்டு நாள் ஏலத்தில் அதை நிறைவு செய்துள்ளோம். ட்ரெண்ட் போல்ட், டாப்லி அணிக்கு வர வேண்டும் என்று விரும்பினோம், இருவருமே இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள்.

ஒவ்வொரு முறையும் ஏலத்தை மதிப்பீடு செய்பவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்பின் துறையில் பலவீனமாக உள்ளது என்று கூறுவார்கள். இந்திய ஸ்பின்னர்களை நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவர்கள் அதிகம் விலை மதிப்பு கொண்டவர்கள். சில இடங்களில், சில பிட்ச்களில் நாங்கள் சாண்ட்னர், அல்லா கஜன்ஃபர் ஆகிய இருவரையுமே ஆடவைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

6-வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களை உந்துகிறது. எப்போதையும் விட இந்த 6-வது கோப்பை எங்களுக்கு மிக மிக முக்கியம். எங்களுக்கு 6வது கோப்பையை வெல்வது முதல் கோப்பையை வெல்வது போன்றது. இந்தமுறை 6வது கோப்பை நிச்சயம்” என்றார் ஆகாஷ் அம்பானி.

இந்திய ஸ்பின்னர்கள் ‘எக்ஸ்பென்சிவ்’ என்று அவர் ஆங்கிலத்தில் கூறியதற்கு குறைந்தது இருபொருள்கள் உண்டு. ஒன்று அதிக விலை கொண்டவர்கள் என்பது. இன்னொன்று கிரிக்கெட் பொருளில் எக்ஸ்பென்சிவ் என்றால், ரன்களை அதிகம் கொடுப்பவர்கள் என்ற பொருளும் தொனிக்கிறது. ஏனெனில் அதிக விலைகளைப் பற்றி மும்பை இந்தியன்ஸ் கவலைப்படுமா என்பது. எனவே ரன்களைப் பற்றித்தான் அவர் கூறுகிறார் என்ற பொருளும் வருகிறது. அவர் உண்மையில் எந்தப் பொருளைச் சுட்டினார் என்பது இருண்மையானதே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x