Published : 27 Nov 2024 08:12 AM
Last Updated : 27 Nov 2024 08:12 AM
கிறைஸ்ட்சர்ச்: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை (28-ம் தேதி) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும் இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. சிறப்பம்சமாக இரு வீரர்களின் மட்டைகளிலிருந்து பெறப்பட்ட மரத்திலிருந்து கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிரஹாம் தோர்ப் குடும்பத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மட்டை அவர், 1997-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக தனது முதல் இரண்டு டெஸ்ட் சதங்களை அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும். அதே நேரத்தில் மார்ட்டின் குரோவ் குடும்பத்தினர் வழங்கிய மட்டை அவர், 1994-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க பயன்படுத்தியதாகும்.
குரோவ் மற்றும் தோர்ப் இருவரும் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் வாழ்க்கையை கொண்டவர்கள். நியூஸிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதப்படும் குரோவ் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 17 சதங்களுடன் 45.36 சராசரியைக் கொண்டிருந்தார். அவர், கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். அதேவேளையில் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற கிரஹாம் தோர்ப் 16 சதங்களுடன், 44.66 சராசரியை கொண்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர், இயற்கை எய்திருந்தார்.
இங்கிலாந்து லெவன்: இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் இடது கை பேட்ஸ்மேனான ஜேக்கப் பெத்தேல் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஸாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஆலி போப், கிறிஸ் வோக்ஸ், ஷோயிப் பஷிர், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT